20/Jan/2021 11:45:32
ஈரோடு, ஜன: ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கிய பாசனநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள கீழ்பவானி ஆயக்கட்டு பாசனத்திற்காக கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இத்தண்ணீரை விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது, நெற்பயிர் முதிர்ச்சிஅடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. அறுவடை செய்யப்படும் நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் மையங்களில் விற்பனை செய்து விவசாயிகள் பயனடையும் வகையில், 22.-1-2021 முதல் அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் இடம் மற்றும் நாள் விவரம்:
22-1-2021 -ஆம் தேதி நசியனூர், பவானி, அம்மாபேட்டை, நாகரணை, உக்கரம், கவுந்தப்õடி, பெரியபுலியூர், பள்ளபாளையம். 25-ஆம் தேதி கொடுமுடி, அஞ்சூர், வெள்ளோடு, வாய்க்கால்புதூர், கே.ஜி.வலசு, மொடக்குறிச்சி, அரச்சலூர், தட்டாம்பாளைனயம், அவல்பூந்துறை, எழுமாத்தூர், சிவகிரி, கஸ்பாபேட்டை ஆகிய 20 இடங்களில் திறக்கப்படுகிறது.
ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள புதுவள்ளியாம்பாளையம், கரட்டடிபாளையம், காசிபாளையம், பொலவக்காளிபாளையம், காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையம் மற்றும் கணபதிபாளையம் கொள்முதல் மையங்கள் கீழ்பவானி பாசனப் பகுதிகளில் அறுவடை பணிகள் முடியும் வரை தொடர்ந்து செயல்படும்.
இந்த மையங்களில் ஏ கிரேடு ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,958 வீதத்திலும், சாதாரண ரக நெல் குவிண்டால் ரூ.1918 வீதத்திலும் கொள்முதல் செய்யப்படுகிறது என ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.