logo
ஏழைகளுக்கு மருத்துவ சேவை.. ஏமாற்ற மாட்டோம்:மருத்துவக்கல்லூரி செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள் உறுதி ஏற்பு.

ஏழைகளுக்கு மருத்துவ சேவை.. ஏமாற்ற மாட்டோம்:மருத்துவக்கல்லூரி செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள் உறுதி ஏற்பு.

19/Jan/2021 07:51:30

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே இலவச ஆங்கிலப்பயிற்சியை நிறைவு செய்த உள் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக்கல்லூரி செல்லும் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள், மருத்துவராகி ஏழைகளுக்கு சேவை செய்வோம், ஏமாற்ற மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

  புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில்  பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு உள்ஒதுக்கீட்டின் மூலம் 18 மாணவ, மாணவிகள் அரசு மற்றும் அரசு உதவியுடன் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்கச் செல்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் மருத்துவக்கல்லூரி சென்று ஆங்கிலத்தால் ஏற்படும் தடுமாற்றத்தை போக்கும் வகையில், நமது நண்பர்கள் எனும் சேவை அமைப்பினர் சார்பில் கீரமங்கலம், மாங்காடு, மறமடக்கி, தாந்தாணி, அரிமளம், மழையூர், பேராவூரணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 12 மருத்துவக்கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியாளர் குருகுலம் சிவநேசன் மூலம் கடந்த 1 மாதத்திற்கு மேலாக இலவச ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜன.20-ம் தேதி மருத்துவக்கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்நிலையில், இலவச ஆங்கிலப்பயிற்சி பெற்ற 12 மாணவ, மாணவிகளுக்கும் திங்கள்கிழமை மாலை கீரமங்கலம் அருகேயுள்ள பெரியாளூர் இணைப்புச்சாலையில் உள்ள விழா அரங்கில், பாராட்டு, வழியனுப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் நெவளிநாதன் தலைமை வகித்தார்.

 

அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச்செல்வம், புதுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் ராஜசேகரன், கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், கவிஞர் ஜீவி பங்கேற்று மாணவ, மாணவிகளை பாராட்டினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகள், ஏமாற்றாமல் கிராமப்புற ஏழைகளுக்கு சேவை செய்வோம், ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வோம் என்பன உள்ளிட்ட உறுதிமொழி ஏற்றனர்.

Top