logo
ஜனவரி  4 பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லையென்றால் பேரணி: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

ஜனவரி 4 பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லையென்றால் பேரணி: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

01/Jan/2021 08:59:14

புதுதில்லி: மத்திய அரசுடன் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிடில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 37-வது நாளாக தில்லி எல்லைகளில் போராடி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக அடிக்கடி மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசுடன் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், ஜனவரி 4-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என்று ஸ்வராஜ் இந்தியா அமைப்பைச் சேர்ந்த யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லையென்றால், ஜனவரி 6-ஆம் தேதி பேரணியில் ஈடுபடுவோம்.

குண்டிலி, மனேசார், பல்வார் ஆகிய பகுதிகளிலிருந்து பிரம்மாண்ட பேரணியில் ஈடுபடுவோம். 50 சதவீத பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு கூறுவது தவறானது.எங்களது கோரிக்கையில் நாங்கள் நிலையாக உள்ளோம். மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம் என்று கூறினார். 


Top