logo
இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 22 பேரில் 7 பேருக்கு கொரோனா தொற்று இல்லை:சுகாதாரத் துறை விளக்கம்

இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 22 பேரில் 7 பேருக்கு கொரோனா தொற்று இல்லை:சுகாதாரத் துறை விளக்கம்

25/Dec/2020 10:17:17

ஈரோடு, டிச: இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இது சாதாரண கொரோனா தொற்றை விட வீரியம் மிக்கதாக இருப்பதாக  சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக இந்தியா இங்கிலாந்து இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் முதல் வந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி டிசம்பர் மாதம் 15-ஆம் தேதிக்கு பிறகு இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்தவர்களில் 22 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையினர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 7 பேர்களின் முடிவுகள் வெளியானது. இதில் இவர்கள் 7 பேருக்கும் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.  மீதமுள்ள 15 பேரின் முடிவுகள் இன்று மாலை வெளிவர உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது: 

இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்தவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 15-ஆம் தேதி முதல் நேற்று வரை 22 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையினர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 7 பேருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என முடிவு வந்துள்ளது. 

மீதமுள்ளவர்கள் முடிவுகள் விரைவில் தெரிந்துவிடும். மேலும் இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்தவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமன்றி அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் விவரமும் சேகரிக்கப்பட்டு அவர்களும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இவர்களில் யாருக்காவது  சளி காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றனர். 


Top