25/Dec/2020 08:55:59
ஈரோடு, டிச: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதேபோல் அரசியல் கட்சியினரும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு புறம் அதிமுக., திமுக., உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தேர்தலில் யாரை களமிறக்கலாம் என்பது குறித்தும் கட்சி மேலிட நிர்வாகிகள் மத்தியில் தீவிர ஆலோசனைகளும் மறுபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேர்தலில் ஜாதி மிக முக்கியமான ஒரு அம்சமாகச் செயல்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒவ்வொரு தொகுதியிலும் எந்த ஜாதியினர் அதிகமாக வசிக்கிறார்களோ அந்த ஜாதியைச் சேர்ந்த வேட்பாளரையே நிறுத்துகின்றனர்.
கொங்கு மண்டலத்துக்குள்பட்ட ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிபாளையம், பவானி, அந்தியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானிசாகர் என மொத்தம் 8 சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன. இதில், பவானிசாகர் தொகுதி மட்டும் தனித் தொகுதியாக உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் ஜாதி ரீதியாக பார்க்கும்போது வேளாளர் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், அதற்கு அடுத்தபடியாக வேட்டுவ கவுண்டர், முதலியார், வன்னியர், நாடார் போன்ற ஜாதியினரின் எண்ணிக்கையும் கணிசமாகவே உள்ளது.
எனவே, வரும் சட்டசபை தேர்தலில் மற்ற ஜாதியினருக்கும் அதிமுகவில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் தொகுதியை தவிர, மற்ற தொகுதிகளில் கவுண்டர் இனத்தை சார்ந்தவர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் கவுண்டர் ஜாதிக்கு அடுத்தப்படியாக முதலியார், வன்னியர், நாடார் அதிகம் உள்ளனர். தொகுதி வாரியாக 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையில் முதலியார், 5 முதல் 10 சதவீதம் வரை வன்னியர், நாடார் உள்ளனர்.
கடந்த காலங்களில் உயிருடன் இருந்த வரையில் எம்ஜிஆர், ஜெயலலிதாக ஆகியோரின் முகராசி மற்றும் செல்வாக்குக்காக ஓட்டுகள் விழுந்தன. தற்போது முதல்வராக இருப்பவர் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர்களை சார்ந்தவர்களுக்கே வாய்ப்பு அதிகம் கொடுத்தால், ஜாதி ரீதியாகவே பார்க்கப்படும். அரை நூற்றாண்டைக் கடந்த ஒரு கட்சி ஜாதி அடையாளத்திற்குள் சிக்கிவிடும் என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது. அந்த ஜாதியைத்தவிர பிற ஜாதியைச் சேர்ந்தவர்களின் ஏக்கம் வெறுப்பாக மாறுவதுடன் அரசியல் களத்தில் பல்வேறு பின் விளைவுகளையும் ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.
மேலும், அரசியல் கட்சி ஒரு அளவுக்கு மேல் வளர்வதும் அக்கட்சியிலிருந்து முதலமைச்சர்கள் உருவாகுவதும் இயலாத காரியமாக மாறிப்போகும். எனவே, இந்தத் தேர்தலிலும் அந்தந்தத் தொகுதியில் உள்ள பெரும்பான்மை ஜாதிகளுக்கே முன்னுரிமை அளித்து வேட்பாளர்களை வழக்கம் போல களமிறக்குவதைச் தவிர்த்து, அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் புதிய கலாசாரம் வர வேண்டும். அப்போதுதான் ஈரோடு மாவட்டத்தில் அதிமுக மீண்டும் கால் பதிப்பதுடன் சாதனை படைக்கும், என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கட்டுரை: சி. ராஜ், செய்தியாளர்-ஈரோடு.