18/Dec/2020 07:34:02
திருவனந்தபுரம்: சபரிமலையில் டிசம்பர் 20 -ஆம் தேதி முதல் தினமும் 2 ஆயிரம் பேருக்கு பதிலாக 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த பல மாதங்களாக மாத பூஜை நாட்களில் கூட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர், மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நவம்பர் 17-ஆம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி வார நாட்களில் தினமும் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்களும், மகரவிளக்கு அன்று 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாகக் கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சபரிமலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து வரும் 20-ஆம் தேதி முதல் தினமும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். நீதிமன்ற ஆணை கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.