logo
புதுக்கோட்டையின் அடையாளம்  மருத்துவர் வி.கே. இராமச்சந்திரன் பிள்ளை..

புதுக்கோட்டையின் அடையாளம் மருத்துவர் வி.கே. இராமச்சந்திரன் பிள்ளை..

07/Dec/2020 10:43:24

புதுக்கோட்டை:  புதுக்கோட்டைக்கு இன்றளவும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி,  தீரர் சத்தியமூர்த்தி  போன்று ஓர் அடையாளமாகத் திகழும் புகழ்பெற்ற மருத்துவர்   வி.கே.ஆர். என்று அன்புடன் அழைக்கப்பட்ட எளிமைக்கு எடுத்துக்காட்டான டாக்டர் வி.கே.ராமச்சந்திரன் பிள்ளை (4.12.1912-26.7.1990)அவர்களின் 108 -ஆவது பிறந்தநாள்  அண்மையில் கொண்டாடப்பட்டது..

இவரைப்பற்றி, டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் எழுதியுள்ள  அந்தக் கால மருத்துவர்கள் என்ற புத்தகத்தில் வி.கே.ஆர்  பற்றி எழுதியுள்ளார். அதிலிருந்து சில துளிகள்...

மருத்துவரைக் காணவந்தார் அந்த நோயாளி. இருமலும் மூச்சுத்திணரலும் சங்கடம் கொடுக்க,  உடன் வந்த உறவினர்கள் பதற,  நோயாளியை பற்பலவாறு சோதித்த மருத்துவர் (உபகரணங்களோ, இயந்திரங்களோ இல்லாமல் நேரடிப் பரிசோதனை மாத்திரமே), நீண்ட பெஞ்ச் ஒன்றில் படுக்கச் செய்தார், தலையை மட்டும் பெஞ்சுக்கு வெளியே தொங்கச் செய்தார்,  நோயாளியை மீண்டும் மீண்டும் இருமச் செய்தார்.

நான்கைந்து முறை இருமிய பின்னும் நோயாளி திணறிக் கொண்டிருப்பதைக் கண்டு ஓங்கி அவரை மருத்துவர் அடிக்க,  பாக்குத்துண்டு ஒன்று அவருடைய வாயிலிருந்து தெறித்து விழுந்தது. கண்கள் கலங்கியிருந்தாலும் மூச்சுத்திணறல் அறவே காணாமல் போயிருக்க ஆசுவாசத்தோடு அந்த நோயாளி எழுந்தார்.

பேசமுடியாத திணறலோடு , உடலெல்லாம் நீலமாக மாறத்தொடங்கியிருந்த நிலையில் வந்த நோயாளி, உடன் வந்தவர்களுக்கு பாக்கு போட்டதே தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் பரிசோதனையை மட்டுமே துணையாகக் கொண்டு நோயாளிக்குத்  தக்க சிகிச்சை அளித்தார் இந்த மருத்துவர்.

 காசநோய் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளின் உறவினர்கள் தங்கி, உணவு சமைத்துக் கொள்வதற்கான இடத்தைத் தன்னுடைய மருத்துவமனையின் பின்புறத்திலேயே ஏற்படுத்திக்கொடுத்தவர். வயதிலும், அனுபவத்திலும் குறைந்தவர்களாக இருந்த மருத்துவர்கள் பலரை ஊக்குவித்து வளர்த்து மேம்படச் செய்தவர் வி.கே.ஆர்.

சிகிச்சை கொடுப்பது நம் கடமை காப்பாற்றுவது கடவுள்தான் என்று அடிக்கடி கூறியவர். தந்தை பெரியார் வழி சிந்தனைகளில் வளர்ந்து, சமூகப் பேதங்களைக் களைந்து, தனக்கே உரித்தாக இருந்த கடவுள் நம்பிக்கையையும் கலந்து வந்தோரையெல்லாம் மிக்க மரியாதையோடு நடத்தியவர்.தன்னுடைய சொந்த ஊர்ப் பகுதியில் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற தணியாத அவாவினால், அரசுப்பணியைத் துறந்து மருத்துவமனை அமைத்துச் செயல்பட்ட மருத்துவர் புதுக்கோட்டையின் புனிதச் செம்மல் டாக்டர் வி.கே.ராமச்சந்திரன் பிள்ளை.

வி. கே.ஆர். என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவரிடத்தில் விந்தையான சில பழக்கங்கள் சில இருந்தன. இரவு நேரங்களில் தன்னுடைய வீட்டின் வெளிப்புறத்தில் கட்டில் போட்டுபடுத்திருப்பார், அவசர உதவி தேவைப்படுகிறவர்கள், உடனடியாக எழுப்ப இது தான் வசதி என்பார்.

மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் பயின்றபோது தனக்கு பேராசிரியராக இருந்த குருசாமி முதலியாரின் பழக்கத்தைத் தானும் கைக்கொண்டார். நோயளிகளிடம் தானாக எந்தக் கட்டணமும் கேட்கமாட்டார். இவருடைய பார்வை படாத இடத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் அவர்களாகப் போட்டுவிட்டு போவார்கள்.

Top