logo
சென்னையில் இருந்து லண்டனுக்கு இடைநில்லா விமான சேவை

சென்னையில் இருந்து லண்டனுக்கு இடைநில்லா விமான சேவை

03/Dec/2020 11:52:32

சென்னை: சென்னையில் இருந்து லண்டனுக்கு இடைநில்லா விமான சேவையை வரும் அடுத்த ஆண்டு ஜனவரில் இருந்து தொடங்க ஏா் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் லண்டனுடன் நேரடி விமான சேவையில் இணையும் 9-ஆவது இந்திய நகரமாக சென்னை இடம்பெறவுள்ளது.

இப்போது தில்லி (வாரத்தில் 7 விமானங்கள்), மும்பை (வாரத்துக்கு 4 விமானங்கள்), கொச்சி (வாரத்துக்கு 3 விமானங்கள்), ஆமதாபாத் (வாரத்துக்கு இரு விமானங்கள்), பெங்களூரு (வாரத்துக்கு இரு விமானங்கள்) கோவா (வாரத்துக்கு இரு விமானங்கள்) கொல்கத்தா (வாரத்தில் ஒரு விமானம்), அமிருதசரஸ் (வாரத்தில் ஒரு விமானம்) ஆகிய நகரங்களில் இருந்து லண்டனுக்கு இடைநில்லா விமான சேவை உள்ளது.

இது தொா்பாக ஏா் இந்தியா செய்தித் தொடா்பாளா் கூறுகையில், கரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கிய பிறகு விமான சேவையை பயன்படுத்துவோா் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருகிறது. லண்டன் செல்லும் விமானங்களுக்கு தில்லி, கொச்சி, கோவா, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து அதிகமானோா் முன்பதிவு செய்கின்றனா். வரும் ஜனவரில் மாதம் முதல் சென்னையில் இருந்து லண்டனுக்கு இடைநில்லா விமான சேவையைத் தொடங்க இருக்கிறோம் என்றாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் 23-ஆம் தேதி இந்தியாவில் சா்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த மே மாதம் முதல் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 



Top