11/Nov/2020 04:58:49
ஈரோடு : ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக பொது செயலாளர்கள் குணசேகரன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் நேற்று ஈரோடு எஸ்.பி. தங்கதுரையிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனு விவரம்:ஈரோடு சென்னிமலை சாலையில் சிட்கோவில் இருந்து ஜீவா ஷெட் வரை சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் போது, இருசக்கர வாகனங்கள் முந்தி செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால், அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும், இரவில் ஜீவா ஷெட்டிற்கு வரும் பஸ்களை சரி பார்த்து ஷெட்டிற்கு உள்ளே அனுப்புகின்றனர். அந்த நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்தால் அதை சாலையோரத்தில் நிறுத்தி கொள்கின்றனர்.
அனைத்து பேருந்துகளும்உள்ளே சென்ற பிறகுதான் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தைத் தொடர வேண்டிய நிலை உள்ளது. இதனால் இரவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இச்சாலையை அகலப்படுத்தும் வரை நடுவில் உள்ள சாலை தடுப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். ஷெட்டிற்கு வரும் பேருந்துகளை சாலையோரம் நிறுத்தாமல் ஷெட்டிற்குள் உடனுக்குடன் செல்ல அனுமதிக்க வேண்டும்.