logo
ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் குழந்தைகள் குளிக்க  பெற்றோர் அனுமதிக்க கூடாது: ஆட்சியர் அறிவிப்பு

ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் குழந்தைகள் குளிக்க பெற்றோர் அனுமதிக்க கூடாது: ஆட்சியர் அறிவிப்பு

02/Dec/2020 01:11:02

புதுக்கோட்டை:   புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால்  அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் குழந்தைகள் குளிக்க  பெற்றோர் அனுமதிக்க கூடாது.நீர்நிலைகளுக்கு  அருகில் நின்று  செல்பி எடுப்பதையும்  பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்: இந்திய வானிலை மண்டலமைய அறிவிப்புகளின் படி,  தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 2.12.2020 முதல்  4.12.2020 வரை  கன மழை  பெய்ய உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்தகால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு பொது மக்கள் பின்வரும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்..

அரசால்  அவ்வப்போது வெளியிடப்படும் வானிலை செய்தி அறிக்கைகளை கேட்டு பொது மக்கள் பின்பற்ற வேண்டும்.  கனமழைக்காலங்களில்  அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும்,  அடையாள ஆவணங்களான ஓட்டுநர்  உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை தண்ணீரில் நனையாத  வகையில்  பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். 

குறிப்பாக ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் எவரும் சென்று குளிப்பதையும், செல்பி எடுத்துக்கொள்வதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதுகுறித்த எச்சரிக்கை பலகைகளை நீர்நிலைகளுக்கு முன்பாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வைக்க வேண்டும்.

மழைகாலங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியரக பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் 1077 மற்றும் 04322-222207 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். புதுக்கோட்டை மீனவர்களும் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை மரங்கள் மற்றும் மின்கம்பங்களில் கட்டி வைக்கக் கூடாது. கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல், பசுந்தீவனம் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். நோய்தொற்று கால்நடைகளை சிகிச்சை அளிக்க அருகில் உள்ள  கால்நடை மருந்தகத்தை அணுகலாம்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில்  மழை மற்றும் புயல் காலங்களில் கால்நடைத்துறையின் சார்பில் ஒன்றியத்திற்கு 10 பேர் வீதம் 130 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்திற்கு தேவையான தீவனங்கள் மற்றும் வைக்கோல்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மழை, வெள்ளம்  குறித்த தேவையற்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம், இதுகுறித்து உடனுக்குடன் அரசால் அறிவிக்கப்படும் அதிகாரப்பூர்வமான  தகவல்களை அறிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.

Top