logo
டிச.8-இல்  புதுக்கோட்டை செல்வ விநாயகர் ஆலயத்தில் காலபைரவாஷ்டமி ஹோமம்

டிச.8-இல் புதுக்கோட்டை செல்வ விநாயகர் ஆலயத்தில் காலபைரவாஷ்டமி ஹோமம்

01/Dec/2020 09:57:32

புதுக்கோட்டை:  புதுகை டிவிஎஸ் அருகே  சண்முகா நகரிலுள்ள  அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் கால பைரவாஷ்டமி முன்னிட்டு  சிறப்பு அஷ்டபைரவ ஹோமம் டிசம்பர் 8 -ஆம் தேதி   (கார்த்திகை- 23) செவ்வாய்க்கிழமை பூரம் நட்சத்திரம் சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில்  சிறப்பு அஷ்ட பைரவ ஹோமம் காலை 8 மணி அளவில் நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து   காலபைரவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும்  அலங்காரம் தீபாராதனை நடைபெற்று அன்னதானமும்  நடைபெறுகின்றது பக்க்தர்கள் கலந்து கொண்டு   கவலைகள் நீங்க  காலபைரவர் திருவருளை பெறவேண்டுகின்றோம். நிகழ்ச்சிஏற்பாடுகளை  கோவில் நிர்வாக  குழுவினர்கள்  தலைவர் ராஜேந்திரன் ஆலய அர்சகர் சந்தோஷ் அய்யர் சண்முகாநகர் பக்தர்கள் குழுவினர்கள் செய்து  வருகின்றனர் 

காலபைரவாஷ்டமிப்பற்றி  அர்சகர் சந்தோஷ் அய்யர்(9976474849) கூறியதாவது:  சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. இவர் காக்கும் கடவுள். இவரது ஜென்மாஷ்டமி காலபைரவாஷ்டமியாக கடைபிடிக்கப் படுகிறது. 

பைரவரின் திருவுருவத்தில் நவகிரகங்களும் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழங்காலில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன. நவம்பர் 19 (செவ்வாய்க்கிழமை) காலாஷ்டமி கொண்டாடப்பட உள்ளது இந்த நேரத்தில் அவரை எந்த ராசிக்காரர்கள் எப்படி வணங்க வேண்டும் என்ற முறை உள்ளது.

ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவன் கோயில்களில் இரவு பூஜை முடிந்த பின் சந்நிதிகளைப் பூட்டி சாவியைக் கால பைரவர் காலடியில் வைத்து வீடு செல்வார்கள். மறுநாள் அதிகாலையில் அந்தச் சாவிகளை எடுத்து சன்னிதி திறந்து பூஜைகள் செய்யத் தொடங்குவர். அந்த அளவுக்குத் திருட்டுப் பயம்கூட இன்றி வாழ்ந்தனர்.

பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார். கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியிலும் ராகு காலத்திலும் பூஜை செய்வது சிறப்பானது. இன்றைக்கு நல்ல காலம் பிறக்க வேண்டியும், பிரச்சினைகள், கடன் தொல்லைகள் தீரவும் தேய்பிறை அஷ்டமியில் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார். அமாவாசை மற்றும் பெளர்ணமி ஆகிய திதிகளுக்கு அடுத்த எட்டாம் நாளான அஷ்டமி திதியன்று கால பைரவரை வணங்க உகந்த நாட்களாகும். அன்றைய தினம் கால பைரவருக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவற்றைச் செய்யலாம். கால பைரவரை வணங்கினால் உடைமைகள் கூடக் களவு போகாது என்பது ஐதீகம்.பைரவரை எப்போது வணங்கலாம்          

 அஷ்டமி திதியில் மட்டுமல்லாது ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.

பைரவர் வாழ்க்கையில் வறுமை வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். சொர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும், தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடலாம். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்த, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

செல்வ வளம் பெருகும் வறுமை நீங்கும்: நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள். நீண்ட நாட்கள் வறுமையில் இருந்தவர்கள் வளம் பெறுவார்கள். தொகுப்பு.. டீலக்ஸ் ஞானசேகரன்-புதுக்கோட்டை.


Top