logo
விரைவில் முடிவை அறிவிப்பேன்- பெயருக்கு கட்சியை ஆரம்பித்து தேர்தலில் தோற்க விரும்பவில்லை: ரஜினி விளக்கம்

விரைவில் முடிவை அறிவிப்பேன்- பெயருக்கு கட்சியை ஆரம்பித்து தேர்தலில் தோற்க விரும்பவில்லை: ரஜினி விளக்கம்

01/Dec/2020 09:20:14

சென்னை: அரசியலில் குதிப்பது குறித்து விரைவில் முடிவை அறிவிப்பேன்  என்று நடிகர் ரஜினிகாந்த்  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களின் கருத்துகளை ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகக் கேட்டறிந்தேன். நான் என்ன முடிவெடுக்கிறேனோ அதற்கு கட்டுப்படுவதாக அவர்கள் உறுதிபடக் கூறினார்கள் என்றார் ரஜினிகாந்த். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் என்னுடைய அரசியல் முடிவை அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும் நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என, சமூக வலைதளங்களில் அவரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்த ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உண்மையானவை என ஒப்புக் கொண்டார்.

இதனால், ரஜினி காந்த் கட்சி தொடங்குவாரா இல்லையா என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக, அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என டுவிட்டர் வாயிலாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தன் மன்றக் கூட்டத்தை கூட்டினார். 

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையின் போது, கட்சி தொடங்கினால் தற்போதைய சூழலில் வரவேற்பு எப்படி இருக்கும் என ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு நிர்வாகிகள் பதிலளித்தனர்.

குறுகிய காலத்தில் சாத்தியமா.. சட்டசபை தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதே, இந்நிலையில் தனித்துப் போட்டியிடுவது சாத்தியமா என்று நிர்வாகிகளிடம் ரஜினி கேள்வி எழுப்பினார்.கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று நிர்வாகிகள் பதிலளித்தனர்.

பெயருக்கு கட்சியைத் துவக்கி தேர்தலில் வெறும் 10 – 15% வாக்குகளைப் பெற்று தோல்வி அடைய விரும்பவில்லை என்று கூறிய ரஜினி, தேர்தலில் நின்றால் வெற்றி பெற வேண்டும் என்பதை திட்டவட்டமாகக் கூறினாராம்.

செயல்பாட்டில் அதிருப்தி- ஆதாரம் உள்ளது: இந்தக் கூட்டத்தில் மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் 38 பேர் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தில், மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என தெரிவித்த ரஜினி, என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்; அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று பகிரங்கமாகக்கூறியுள்ளார்.

தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கலாமா, தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணியுடனா, மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் எப்படி பார்க்கின்றனர். கட்சி தொடங்கினால் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும், கொரோனா தொற்று இருக்கும் இக்காலக் கட்டத்தில் நம்முடைய பிரச்சாரம் எப்படி,  ஆகிய கேள்விகளை நிர்வாகிகளிடம் கேட்டதாகத் தெரிகிறது.

தொகுதி வாரியாக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதை நிர்வாகிகள் எடுத்துரைத்ததாகவும், உடனடியாக கட்சியை தொடங்க வேண்டும் என மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், முதல்வர் வேட்பாளராக ரஜினியே இருக்க வேண்டும் எனவும் மன்ற நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. இதற்கு ரஜினி, இன்னும் அதிகமாக உழைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள் என தெரிவித்ததாகவும் தெரிகிறது.

போயஸ்கார்டன் வீட்டில் பேட்டி: கூட்டத்துக்குப் பிறகு, போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியே ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மாவட்ட செயலாளர்களுடைய கருத்தைக் கேட்டேன். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொன்னார்கள். நானும் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன். எனவே, நான் எந்த முடிவை எடுத்தாலும் அனைவரும் கூட இருப்போம் என்று ரஜினி மன்ற நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர். விரைவில், நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.


Top