logo
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த நாள் நினைவலைகள்..

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த நாள் நினைவலைகள்..

29/Nov/2020 11:37:40

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (நவ.29- 1908 - ஆக.30- 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908-ஆம் ஆண்டு நவம்பர் 29 -ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். 

அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936 களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.

இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வழங்கியவர்.

காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.

கொலைக் குற்றச்சாட்டு: அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார்.

ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது. மறைவு: 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 -ஆம் தேதி தனது 49வது வயதில் கலைவாணர் காலமானார். 

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள மணிமேடை சந்திப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரால் திறக்கப்பட்ட சிலை கம்பீரமாக நின்று அவரது புகழை பரப்பிக் கொண்டிருக்கிறது.

நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. அவர் வாழ்வும் 49 ஆண்டுகளில் சுருக்கமாக முடிந்தாலும் வரலாறு அவர் பெயரை வாரி அணைத்துக் கொண்டது என்பது மட்டும் உண்மை.  தமிழக அரசு  கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. 


Top