logo
ரயில் பெட்டிகளான அரசுப் பள்ளி வகுப்பறை... ஆசிரியர்களின் புதுமையில் பூத்த கைவண்ணம்..!

ரயில் பெட்டிகளான அரசுப் பள்ளி வகுப்பறை... ஆசிரியர்களின் புதுமையில் பூத்த கைவண்ணம்..!

29/Nov/2020 11:00:31

புதுக்கோட்டை:   மாணவர்களின் ரயில் பயண ஆசையை நிறைவேற்ற, அரசுப் பள்ளி வகுப்பறைகளை, ரயில் பெட்டிகளைப் போல வண்ணம் தீட்டி  பள்ளி ஆசிரியர்கள் அசத்தியுள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, லெக்கணாப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 236 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாகப் பள்ளியின் உள்கட்டமைப்பை மாற்றி அமைத்தால்,  சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவர்களைக் கவர்ந்து  சேர்க்கை அதிகரிக்க முடியும் என்ற எண்ணத்தில் இப்பள்ளியின் ஆசிரியர்கள்   பல்வேறு  புதுமைகளைப் புகுத்தி வருகின்றனர்   

கிராமத்து மாணவர்களின் ரயில் பயணம் என்ற ஆசையை நிறைவேற்ற நினைத்த தலைமை ஆசிரியர் ஆண்டனி, கீரனூர் - இராமேஸ்வரம்  வரை மாணவர்களை ரயிலில் அழைத்துக் கொண்டு சென்று திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால்,கொரோனா  தொற்று  மாணவர்களை முடக்கி போட்டுவிட்டது. 

 இந்த நிலையில்தான், பள்ளியின் ஓவிய ஆசிரியர் ராஜேந்திரன் தனக்குத்தோன்றிய  புதிய யோசனையை  தலைமை ஆசிரியரிடம் கூறினாராம். யோசனையில் ஈர்க்கப்பட்ட த தலைமை ஆசிரியர் ஆண்டனி, உடனடியாக அந்த யோசனையை நிறைவேற்ற  நடவடிக்கை எடுத்தார்.

அதில்,  3  அறைகள்  கொண்ட வகுப்பறை பக்கவாட்டு பகுதியில், சென்னை - கன்னியாகுமரி விரைவு ரயிலைப் போல ஓவியம்  தீட்டும்  பணிகளை  ரூ.15 ஆயிரம் செலவில், ஓவிய ஆசிரியர் ராசேந்திரன், தலைமை ஆசிரியர் ஆண்டனி, உதவி ஆசிரியர் ராஜ்குமார் ஆகிய மூவரும் சுமார் 2 மாதங்களுக்கு மேலாக  ஈடுபட்டனர். இதனால், வகுப்பறைகள் ரயில் பெட்டிகளாகக் காட்சியளித்தது.

  ரயில் நிலையத்தில், ஒரு ரயில் நிற்பது போன்ற  வண்ண ஓவியம்  காண்போரை பள்ளிக்குக் கவர்ந்து இழுத்து வருகிறார் என்றால் மிகையில்லை.  இதைப் பார்ப்பவர்களுக்கு, பள்ளிக்குள் எப்படி ரயில் பெட்டிகள் வந்தது என்று கேட்கத் தோன்றும் வகையில்  தத்ரூபமாக  வரைந்து ரயில் பெட்டியில் எழுதப்படும் வாசகங்களும் இடம் பெறச்செய்திருந்தனர். 

 இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனி கூறியது: எங்கள் பள்ளிக்குப் படிக்க வரும் மாணவர்கள் அனைவருமே கிராமப்புற மாணவர்கள்தான். பெரும்பாலானவர்கள்  ரயிலில்  பயணித்ததில்லை. இதைக் கருத்தில் கொண்டு அந்தக்குறையை நீக்கும்  நோக்கில் மாணவர்களுடன்  ஒரு நாள் ரயிலில் செல்ல திட்டமிட்டோம்.

கொரோனா முடக்கத்தால்  அந்த ஆசை நிறைவேறவில்லை. அப்போதுதான் ஓவிய ஆசிரியர் ராசேந்திரன், வகுப்பறைகளை ரயில் பெட்டிகளை வண்ணம் தீட்டலாம்,  வகுப்பறைக்கு வரும்  மாணவர்கள் தினமும் ரயிலில் பயணிப்பது போலவே அமையும் என்றார். அவரது கற்பனையை செயல்படுத்த  முடிவெடுத்தோம். ரூ.15 ஆயிரம் செலவானது. இறுதியில் பள்ளி வளாகத்தில் ரயில் பெட்டிகளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டோம். 

எல்லா வேலைகளும் முடிந்த பிறகு சக ஆசிரியர்கள், ஆசிரியைகளே ஆச்சர்யப்பட்டு, புறப்படும் ரயிலில் ஏறுவது போல ஓடிச் சென்று ஏறி, அதை வீடியோக்களாகவும் பதிவு செய்துகொண்டனர். இந்த ரயில் பெட்டிகளைக் காண மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் வந்து போகிறார்கள். இனிமேல் எங்கள் மாணவர்களின் ஆசையை நிறைவேற்றுவோம் என்றார். அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்களும்  எதற்கு சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு  இந்த  புதிய சிந்தனை நல்ல உதாரணம். 


Top