logo
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில்  பக்தர்கள் இல்லாத சூரசம்ஹாரம் விழா

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் இல்லாத சூரசம்ஹாரம் விழா

21/Nov/2020 04:19:21

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. முதன் முறையாக பக்தர்கள் யாரும் இல்லாத நிலையில் சம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

அறுபடை வீடுகளில் 2-ஆவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 15-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தது.

இந்தாண்டு கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழக அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கோயில் வளாகத்தில் விரதமிருக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அதே போல் விழா நாட்களில் தினமும் 10 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கலயாண நிகழ்ச்சியில் கலந்த கொள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியளிக்கப் படவில்லை.

இந்நிலையில், சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியதும் யாகசாலை பூஜைகள் துவங்கியது.

காலை 10:30 மணிக்கு யாகசாலையில் பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், பகல் `11 மணிக்கு உச்சிகால தீபாராதனை ஆனதும் மூலவருக்கு சஷ்டி சிறப்பு தீபாராதனை நடந்தது. அதன்தொடர்ந்து யாகசாலையில் பகல் 12 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதருக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு டல்களுடன் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சந்நிதி முன்பு எழுந்தருளினார்.

அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மதியம் 2.15 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு மகாதீபாராதனை நடந்தது. பின்னர் மாலை 4.35 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி துவங்கியது. வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கோயில் கடற்கரை முகப்பில் சம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக சூரபத்மன் சிவன் கோயிலிருந்து நேரடியாக கோயில் கடற்கரைக்கு படை பரிவாரங்களுடன் வந்திருந்தான். முதலில் முதலில் யானை தலையுடன் கூடிய கஜமுகசூரன் போரிடம் நிகழ்ச்சி நடந்தது. முருகப்பெருமான் தனது வெற்றி வேலால் சரியாக மாலை 4:47 மணிக்கு கஜ முக சூரனை வீழ்த்தினார்.அதனை தொடர்ந்து மீண்டும் சிங்கமாக மாறி சூரன் போரிடும் நிகழ்வு நடந்தது. சுவாமி ஜெயந்திநாதர் தனது வேலால் சிங்க முக சூரனை மாலை 4:56. மணிக்கு வீழ்த்தினார். பின்னர் சூரன் தனது சுயரூபத்துடன் போர் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

மாலை 5:05 மணிக்கு செந்திலாண்டவர் தனது வெற்றி வேலால் சூரபத்மனை வதம் செய்தார். பின்னர் சேவலும் மாமரமாக மாறி போரிட்டான். சுவாமி ஜெயந்திநாதர் சூரனை சேவலமாக மாமரமாக ஆட்கொண்டார்.பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கோயில் 108 மகாதேவர் சன்னதியில் சாயாபிஷேகம் எனப்படும் கண்ணாடி பிம்பத்திற்கு அபிஷேகம் நடந்தது.

இந்தாண்டு சூரசம்ஹாரம் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாததால் பக்தர்களின்றி விழா நடந்தது. வீடுகளில் விரதமிருந்த பக்தர்கள் சம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை நிறைவு செய்தனர்.சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளாத நிலையில் கடற்கரையில் நிகழ்ச்சியை யாரும் காண முடியாத படி தகர சீட்டுகளால் மறைக்கப்பட்டிருந்தது. நகரில் வெளியூர் வாகனங்கள் வர முடியாத வகையில் 7 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார், திருச்செந்தூர் ஏ.எஸ்.பி. ஹர்ஷ் சிங் ஆகியோர் முன்னிலையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.




Top