logo
கோயில்களில் பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபாடு நடத்த அரசு அனுமதியளிக்க மண்பாண்டத்தொழிலாளர்கள் கோரிக்கை

கோயில்களில் பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபாடு நடத்த அரசு அனுமதியளிக்க மண்பாண்டத்தொழிலாளர்கள் கோரிக்கை

19/Nov/2020 05:56:36

புதுக்கோட்டை:  கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு புதுக்கோட்டை குசலக்குடி  பகுதியில்    விளக்கு தயாரிப்பு பணிகள்  முனைப்புடன்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  தமிழக அரசு  மண்பாண்ட தொழிலை நலிவடையாமல்  பாதுகாக்கும் வகையில் கோயில்களில் பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட அனுமதியளிக்க  வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். இந்த கார்த்திகை தீபத் திருநாளின்போது வீடுகள் மற்றும் ஆலயங்களில் அகல் விளக்குகள் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த ஆண்டு வரும் 29-ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.  இந்நிலையில், புதுக்கோட்டை  மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்கு தயாரிக்கும் பணியை   மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், போதிய விற்பனை அரசின் ஆதரவின்மை மற்றும்  மண்பாண்டத் தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு  செல்லுகின்ற  காரணத்தால் மண்பாண்டம் மற்றும் அகல் விளக்கு  தொழில்  நலிவடைந்து வருகிறது.  


இது குறித்து, புதுக்கோட்டை அருக குசலாக்குடி கி்ராமத்தைச் சேர்ந்த  அகல் விளக்கு தயாரிக்கும் தொழிலாளர் பாலமுருகன் வேளாளர் கூறியதாவது:   நான் சிறுவயதிலிருந்தே  எனது தகப்பனாரிடம் மண்பாண்டத் தொழிலைக்   கற்றுக்கொண்டு தற்போது எனதுமனைவி ராதிகா சகோதரர் கார்த்திக்-செல்வராணி  குடும்பத்தினருடன்  சேர்ந்து மண்பாண்டத் தொழிலை  செய்துவருகிறேன் .ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கான கார்த்திகை சிட்டி செய்துவிடுவேன் .  தற்போது மழை பெய்ததால்  தயாரிக்கும் பணி யில் தொய்வு ஏற்பட்டுள்ளது.  ஆயிரம் கார்த்திகை சிட்டி கொண்ட மூட்டை ரூ.  550 முதல்   600  வரை விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர் .

நாங்கள் செய்த  கார்த்திகை  சுட்டியினை     கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தோம்.   ஆனால், தற்போது சீன களி மண்ணால் செய்யப்படும்  விளக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு அகல் விளக்குகளின் விற்பனையும், உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. இத்தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் போதிய லாபம் இல்லாத காரணத்தினால் மாற்றுத் தொழிலை தேடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழக அரசு நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை பாதுகாக்க கோவில்களில் அகல் விளக்கு தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். வங்கிக்கடன்கள் வழங்கி புதுப்புது வடிவங்களில் அகல் விளக்கு உள்ளிட்ட மண்பாண்டங்கள் பொருட்கள் தயாரிக்கும் நவீன இயந்திரங்களை வழங்கி இத்தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Top