16/Nov/2020 03:50:51
ஈரோட்டில் விளையும் மஞ்சள் மிகவும் புகழ் பெற்றது. இந்திய அளவில் மிகப் பெரிய மஞ்சள் சந்தையாக
திகழ்ந்து வரும் ஈரோட்டில் இருந்து மஞ்சள் கர்நாடகா , குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக இலங்கை அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு மஞ்சள் உள்ளிட்ட சில பொருட்களை இறக்குமதிக்கு தடை விதித்தது. இந்த ஆண்டு செப்டம்பர் முதல் தடையை அந்நாடு கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு மஞ்சள் இறக்குமதி செய்தால் குறைந்த அளவே செலவாகும் என்பதாலும் ஈரோடு மஞ்சள் புவிசார் குறியீடு பெற்று சிறந்து விளங்குவதால் இலங்கை வியாபாரிகள் ஈரோடு மஞ்சள் பெரிதும் விரும்பி கொள்முதல் செய்து வந்தனர்.
இதற்கிடையே, இலங்கை அரசு மஞ்சள் இறக்குமதியை தடை செய்ததால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் மஞ்சள் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 4 மாதங்களில் மட்டும் இலங்கையுடனான மஞ்சள் வர்த்தகம் ரூ.40 கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரோடு மஞ்சள் வணிகர்கள் வரிகள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ராஜமாணிக்கம் தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இப்பிரச்சையில் தலையிட்டு இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி மஞ்சள் இறக்குமதி செய்வதற்கான அனுமதியைப் பெற்று தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இலங்கை மஞ்சளுக்கான சந்தையாக விளங்கி அங்கிருந்து. பல்வேறு வெளிநாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததாக தெரிவித்த மஞ்சள் வணிகர்கள், தற்போது இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மஞ்சள் வியாபாரிகள் தெரிவித்தனர்.