logo
ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை  விற்பனை அமோகம்

ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை அமோகம்

10/Nov/2020 07:31:19

ஈரோடு: ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் புகழ்பெற்ற ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ்  தாக்கம் காரணமாக 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது. தொடக்கத்தில் சில்லரை வியாபாரம் ஓரளவு நடந்தது ஆனால் மொத்த வியாபாரம் மந்த நிலையில் இருந்தது.

பின்னர் நாள் செல்ல செல்ல வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியது. தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் இன்று(10.11.2020) ஈரோடு ஜவுளி சந்தை, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே. சாலை போன்ற பகுதிகளில் சில்லரை ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

 இந்தப் பகுதிகளில் சாலைகளின் இருபுறமும் ஆங்காங்கே ஜவுளிக்கடைகளில் மக்கள் ஜவுளிகளை வாங்கி  சென்றனர். சாதாரண நாட்களில்ரூ. 2 கோடி வரை வியாபாரம் நடைபெறும். பண்டிகை நாட்களில் ரூ 5 கோடி வரை வியாபாரம் நடைபெறும். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தீபாவளியை ஒட்டி மக்கள் அதிக அளவில் ஜவுளி ரகங்களை வாங்கி சென்று வருகின்றனர்.

 தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் போன்ற பகுதியில் இருந்தும் மொத்த வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதில், குழந்தைகளுக்கான ஜவுளி ரகங்கள் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளன.

இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும்போது, ஈரோடு ஜவுளி சந்தையில் சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் அதிகளவில் விற்பனையாவது வழக்கம் தான். தற்போது கொரோனா தாக்கம் காரணமாக முதலில் வியாபாரம் மந்த நிலையில் இருந்தது. பின்னர் நாள் செல்லச்செல்ல ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது.

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி கடந்த ஒரு வாரமாக ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஜவுளி ரகங்கள் அதிக அளவில் வந்துள்ளன. கடந்த ஒரு வாரமாக 80 சதவீதம் விற்பனை நடந்துள்ளது. அதாவது ரூ.10  கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இன்னும் தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்களே இருப்பதால் வியாபாரம் இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர். 


Top