logo
அமெரிக்க அதிபரின் மருத்துவக் குழுவில் ஈரோடு கிராமத்து பெண்

அமெரிக்க அதிபரின் மருத்துவக் குழுவில் ஈரோடு கிராமத்து பெண்

10/Nov/2020 07:05:48

ஈரோடு: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கரோனாவை கட்டுப்படுத்தும் குழுவின் உறுப்பினரில் ஒருவராக  ஈரோடு அருகே கிராமத்தை சேர்ந்த செலின் ராணி கவுண்டர் என்ற பெண் மருத்துவர் இடம் பெற்றுள்ளார்.

 அமெரிக்காவில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் வழிகாட்டுதல் குழு அமைத்துள்ளார். 13 பேர் கொண்ட இந்த குழுவின் தலைமைப் பொறுப்பில் 3 பேர் உள்ளனர். அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம்பெற்றுள்ள நிலையில், குழு உறுப்பினராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர்  நியமிக்கப்பட்டுள்ளார். செலின் ராணி கவுண்டர் நியூயார்க் பல்கலைக் கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.  முன்பு அமெரிக்க நாட்டின் காநோய் தடுப்பு பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.


 1998 முதல் 2012 வரையிலான கால கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, மால்வாய், எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், ஹெச்.ஐ.வி. தொடர்பான மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். தவிர நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களை பாதிக்கும் நோய்கள் குறித்தும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவர் ஆராய்ச்சி செய்துள்ளார்.

  செலின் ராணி கவுண்டர் குறித்து அவரது பெரியப்பா மகன், ஈரோட்டில் வசிக்கும் ஓய்வுபெற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் தங்கவேல் கூறியதாவது:  செலின் ராணி கவுண்டர் தந்தை ராஜ் கவுண்டர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 1966 -ஆம் ஆண்டில் அமெரிக்க சென்று, அங்கு அந்நாட்டு போயிங் விமான நிறுவனத்தில் பணியாற்றி அந்நிறுவன இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர்.  அவர் அந்த நாட்டை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து அங்கேயே வசித்து வருகிறார்.

  அவரது 3 பெண் குழந்தைகளில் மூத்தவர்தான் செலின் ராணி கவுண்டர். இவர் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். இதுவரை 4 முறை மொடக்குறிச்சி வந்துள்ளார். ராஜ் பவுண்டேசன் என்ற பெயரில் மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மேம்பாட்டுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். 35 வயதான செலின் ராணி கவுண்டரின் கணவர் கிராண்ட் அமெரிக்காவில் ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார் என்றார்.  செலின் ராணி கவுண்டர் பெயர் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது, பெருமாபாளையம் கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


                                                                               


Top