logo
வணிகர்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் இரவு நேரங்களில் கிருமி நாசினி தெளிப்பு

வணிகர்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் இரவு நேரங்களில் கிருமி நாசினி தெளிப்பு

04/Nov/2020 06:25:36

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் 60 வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்தப்பணி பகல் நேரங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தீபாவளி நெருங்கி வரும் நிலையில் முக்கியமான கடைவீதிகள், ஜவுளி நிறுவனங்கள் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால், பகல் நேரங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி சற்று சவாலாக இருந்து வந்தது. இது தொடர்பாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வணிகர்கள் பங்கேற்ற கூட்டம் மாநகராட்சி ஆணையர் மா.  இளங்கோவன் தலைமையில் நடந்தது.

இதில் பங்கேற்ற வணிகர்கள் பகல் நேரங்களில் கிருமிநாசினி தெளிப்பதற்கு பதிலாக இரவு நேரங்களில் தெளித்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று இனி இரவு நேரங்களில் கிருமி நாசினி தெளித்து படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இரவு நேரங்களில் மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் முக்கியமான கடைவீதிகளில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

இது குறித்து, மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறியதாவது:   தீபாவளி பண்டிகை வரும் 14 -ஆம் தேதிகொண்டாடப்பட உள்ளது. ஜவுளி, துணி, நகை, தலை தீபாவளி சீர்வரிசை உள்ளிட்ட பொருட்களுக்கு ஆர்டர் கொடுக்கவும், வாங்கி செல்லவும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஈரோடு மாநகருக்குள் வந்து செல்கின்றனர்.

அதனால், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்க வேண்டியுள்ளது. பகல் நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால், முழுமையாக கிருமி நாசினி தெளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதனால், இனி தீபாவளி முடியும் வரை, மக்கள் அதிகம் கூடும் இடங்களான, மேட்டூர் சாலை, மீனாட்சிசுந்தரனார் சாலை, ஆர்.கே.வி., சாலை, நேதாஜி சாலை, பெருந்துறை சாலை, பன்னீர் செல்வம் சந்திப்பு, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி உள்ளிட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ள சாலைகளில், இனி இரவு நேரங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இரவு பத்து மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்ட பின் இப் பணிகள் மூன்று  ஷிப்ட்களாக நடக்கும் என்றார். 


Top