logo
சமூக இடைவெளி, முக கவசம் அணியாதவர்கள், ஜவுளி நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு

சமூக இடைவெளி, முக கவசம் அணியாதவர்கள், ஜவுளி நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு

03/Nov/2020 06:43:28

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், சிலர் இதைக் கடைப்பிடிப்பதாகவே தெரியவில்லை. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கடைவீதிகள், ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகி உள்ளது.தற்போது மாவட்டத்தில் கொரோனா  வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. வணிக நிறுவனங்கள் ஜவுளிக்கடைகள் சந்தை உட்பட பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை  பின்பற்றாமலும் அலட்சியமாக இருந்து வருகின்றனர். 

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் வணிக நிறுவனங்கள் ஜவுளி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் மாஸ்க் அணியாமல் இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் சில ஜவுளி கடைகளில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாமல் இருந்ததும் தெரியவந்தது. 


இதனால் அந்த ஜவுளி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 20 ஜவுளி கடைகள், முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள் சமூக இடைவெளி  கடைப்பிடிக்காத மக்கள் என ஒரே நாளில் மட்டும் ரூ.20 ஆயிரத்துக்கு அபராதம்  விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் சுகாதார அதிகாரி இக்பால், சுகாதார ஆய்வாளர்கள் கண்ணன் நல்லசாமி சிவக்குமார் உள்பட உடன் இருந்தனர்.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஏராளமான ஜவுளி கடைகள் உள்ளன. தீபாவளிக்கு சில நாட்களே உள்ளதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதனால் சமூக இடைவெளி கேள்வி குறியாகி உள்ளது. மேலும் முக கவசமும் முறையாக அணிவதில்லை.எனவே மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதே போல் ஆங்காங்கே திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். வணிக நிறுவனங்கள் ஜவுளி கடைகள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்

Top