logo
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்

02/Nov/2020 10:49:48

கொடைக்கானல்:  மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இங்குள்ள சுற்றுலா இடங்களை வாகனங்கள் மூலம் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் அவர்கள் பொழுதுபோக்குவதற்கு நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக ஏரியில் படகு சவாரிக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.

இந்தநிலையில், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை, நாளை (செவ்வாய்க்கிழமை) வரை உள்ளது. கொடைக்கானல் எம்.எம்.தெருவில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் இயக்கப்படுகிறது.

ஹெலிகாப்டரில் 15 நிமிடங்கள், வானில் பறந்தபடி கொடைக்கானலின் இயற்கை எழிலை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் வருகையை பொறுத்து ஹெலிகாப்டர் சேவை தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்பவர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். 


Top