logo

பழைய நேரத்துக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கும் நடைமுறை: சேலத்தில் 2 மணி நேரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்

02/Nov/2020 10:35:09

சேலம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு பதிலாக மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி சேலம் மாநகரில் நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. ஆனால், அறிவிப்பு விவரம் தெரியாத ஏராளமான மதுப்பிரியர்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் முன்பு வழக்கம்போல் மது வாங்க குவிந்தனர். ஆனால் மதுக்கடைகள் எதுவும் திறக்கப்படாததை அறிந்த அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சேலம்  டவுன் ரெயில் நிலையம் எதிரே, பால் மார்க்கெட் செல்லும் வழி, புதிய பஸ் நிலையம், முள்ளுவாடி கேட்  உள்பட பல்வேறு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு மதுப்பிரியர்கள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை 2 மணி நேரமாக மது வாங்க காத்திருந்தனர்.

பின்னர் 12 மணிக்கு மதுக்கடைகளை திறந்த உடன் மது வாங்க கூட்டம் கடைகளில் அலைமோதியது. இதைத்தொடர்ந்து மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கி சென்றதை காண முடிந்தது. அதேசமயம் டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுப்பிரியர்கள் தரப்பில் கோரிக்கை  வலியுறுத்தப்பட்டது.

Top