logo
ஈரோட்டில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்

ஈரோட்டில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்

02/Nov/2020 08:21:17

ஈரோட்டில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு பெரியசேமூர் பச்சைப்பாளி மேட்டில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்தின் டவர் அமைக்கும் பணிகள் நேற்று நடந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் செல்போன் டவர் அமைக்கும் இடத்திற்கு திரண்டு வந்து, செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, டவர் அமைக்கும் பணியாளர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது: இங்கு பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு தனியார் செல்போன் டவர் அமைத்தால் அதில் ஏற்படும் கதிர்வீச்சால்  குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள். மேலும், கால்நடைகளும் பாதிக்கப்படும். எங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வழக்கு நிலுவையில் உள்ளபோது, நிறுவனத்தினர் திடீரென டவர் அமைக்க வந்து விட்டதால், நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம், என்றனர்.

இதைத்தொடர்ந்து, போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு வடக்கு போலீஸார் மக்களிடம், செல்போன் டவர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நீதிமன்றத்தில் பொதுமக்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை எவ்வித பணியையும் மேற்கொள்ளக்கூடாது என செல்போன் டவர் நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, செல்போன் டவர் அமைக்கும் பணியை கைவிட்டதால், பொதுமக்களும் கலைந்து சென்றனர்.

Top