logo
10 மாதங்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில்  403 பள்ளிகள் திறப்பு: மருத்துவ குழுவினர் கண்காணிப்பு

10 மாதங்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில் 403 பள்ளிகள் திறப்பு: மருத்துவ குழுவினர் கண்காணிப்பு

21/Jan/2021 12:06:59

ஈரோடு, ஜன:கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் ஆன் லைன் ஆப்புகள் மூலமாகவும், அரசு தொலைக்காட்சிகள் மூலமாகவும் மாணவ மாணவிகள் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். தற்போது கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் மீண்டும் பள்ளிகளை திறக்கலாமா என்று பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. முதலில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க வேண்டாம் என்று கூறியதால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு பொது தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்தது. இந்நிலையில் இரண்டாவது கட்டமாக எஸ்.எஸ்.எல் சி , மற்றும் பிளஸ்-2 மாணவ மாணவிகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாமா ? என்று மீண்டும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் 95 சதவீத பெற்றோர்கள் பள்ளிகளை பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கலாம் என்று தெரிவித்தனர். .

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 186 அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் மட்டும் 14 ஆயிரத்து 96 மாணவ -மாணவிகளும், 12-ம் வகுப்பில் 11,100 மாணவர்கள் என மொத்தம் 25 ஆயிரத்து 196 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதைப்போல் 30 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் 3911 மாணவர்களும், 12ஆம் வகுப்பில் 2441 மாணவர்கள் என மொத்தம் 6352 மாணவ-மாணவிகளும், 149 மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் 9870 மாணவர்களும், 12-ம் வகுப்பில் 9 ஆயிரத்து 847 மாணவர்கள் என மொத்தம் 19,717 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதைப்போல் 38 சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் 1765 மாணவர்களும், பன்னிரண்டாம் வகுப்பில் 1322 மாணவர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 87 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மொத்தம் மாவட்டம் முழுவதும் 403 பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் 29 ஆயிரத்து 642 மாணவ மாணவிகளும், 12-ம் வகுப்பில் 24 ஆயிரத்து 710 மாண -மாணவிகள் என மொத்தம் 54 ஆயிரத்து 352 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.


கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று முதல் செயல்படத் தொடங்கியது. பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. பள்ளியில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வட்டங்கள் போடப்பட்டு இருந்தன அதில் மாணவ மாணவிகள் வரிசையாக முக கவசம் அணிந்து வந்தனர். பள்ளிக்குள் நுழைந்த உடன் அவர்களது கையில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் படுத்தப்பட்டது. அவர்களது உடல் வெப்பநிலையை கண்டறியும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. 

மேலும் ஒவ்வொரு பள்ளிகளிலும் மருத்துவ குழுவினர் மாணவ மாணவிகளை கண்காணித்தனர். முக கவசம் அணியாமல் வந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளி சார்பில் முக கவசம் வழங்கப்பட்டது. அவர்கள் பெற்றோர் ஒப்புதல் கடிதத்தைக் கொண்டு வந்து ஆசிரியரிடம் வழங்கினர். அதை ஆசிரியர்கள் சரிபார்த்தனர்.


பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.

அதில் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், கைகளை சுத்தமாக கழுவாமல் பள்ளிக்குள் வரக்கூடாது, 40 வினாடிகள் சோப்பு போட்டு கை கழுவுதல் வேண்டும். பள்ளிக்கு வரும்போது கிருமிநாசினியால் சுத்தம் செய்து வரவும். பள்ளி வளாகத்திற்குள் கண்டிப்பாக எச்சில் துப்பக்கூடாது. முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பள்ளியில் கண்டிப்பாக அனுமதி இல்லை. தூய்மையான முக கவசத்தை மட்டுமே அணிந்து வரவேண்டும். எக்காரணம் கொண்டும் மாணவர்கள் முகத்தையோ முக கவசத்தையோஅடிக்கடி தொடக்கூடாது. 


அதைப்போல் முக கவசத்தை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொள்ளக்கூடாது. மேலும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசக்கூடாது. கழிவறைக்கு சென்று வந்த பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மாணவர்கள் வீட்டிலிருந்தே உணவையும் குடிநீரையும் கொண்டு வர வேண்டும். 6 அடி சமூக இடைவெளியுடன் அமர வேண்டும். காய்ச்சல் சளி இருமல் உள்ளவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு  அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது.


ஒரு வகுப்பறையில் 20 முதல் 25 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு உடன் படிக்கும் நண்பர்களை பார்த்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முதல் நாளில் உற்சாகத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். இன்றும் நாளையும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படாது. அதற்கு பதிலாக கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பொதுத்தேர்வு அச்சமின்றி எழுதுவது தொடர்பான ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்படுகிறது. வெளியிருந்து பள்ளிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு விடுதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறப்பு குறித்து 10-ஆம் வகுப்பு மாணவர்கள் கூறும்போது, கொரோனா தாக்கம் காரணமாக கிட்டத்தட்ட 9 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. நாங்கள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகளில் பங்கேற்று வந்தோம். இருந்தாலும் பள்ளி எப்போது திறக்கும் என்ற ஆவலில் இருந்தோம். இன்று பள்ளிகள் திறந்ததால் எங்களது நண்பர்களையும் ஆசிரியர்கைளையும் பார்த்ததில் மகிழ்ச்சி.

பொதுத் தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது.பாடங்களில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து நாங்கள் நேரடியாகவே ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம். முக கவசம் அணிந்து வருவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவை எங்களுக்கு புதிய அனுபவமாக உள்ளது என்றனர்.ஈரோடு மாவட்டத்தில் கோபி, அந்தியூர் ,பவானி, சத்தியமங்கலம், தாளவாடி, மொடக்குறிச்சி கொடுமுடி போன்ற பகுதிகளிலும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

Top