logo
ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்: டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி

ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்: டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி

10/Aug/2021 01:01:56

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில்  திங்கள்கிழமை  முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல படுத்தப்பட்டுள்ளதையடுத்து  டீ கடைகளில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது 

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்தது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது.வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற காரணமாக நோய் பாதித்தவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர்கள் விரைவாக குணம் அடைந்தனர். 

இதனால் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது. ஒன்றரை மாதமாக தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களாக மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதன் உச்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 198 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு அவை அமலுக்கு வந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும்  காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி,  அனைத்து கடைகளும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. உணவகங்களில் அனைத்திலும் மாலை 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டீ கடைகளிலும் இன்று முதல் பார்சலில் மட்டுமே டீ ,காபி வழங்கப்பட்டது. கடைகளில் அமர்ந்து டீ சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது. அனைத்து கடைகளிலும் நுழைவாயிலில் கிருமி நாசினி, சனிடைசர், பெரிய கடைகளில் கை கழுவும் சோப் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி, சனிடைசர் வைக்கப்பட்டிருந்தது. இதை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க அலுவலர்கள் குழுவினரும் நியமிக்கப்பட்டு இருந்தது. அவர்களும் பல்வேறு கடைகளில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. சந்தை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இன்று மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் ஆங்காங்கே சோதனை செய்து முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளி இன்றி வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

Top