logo
மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று தடுப்பூசி போடப்படும்: ஆட்சியர் கவிதா ராமு தகவல்

மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று தடுப்பூசி போடப்படும்: ஆட்சியர் கவிதா ராமு தகவல்

21/Jun/2021 06:51:09

புதுக்கோட்டை, ஜூன்: மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னேற்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில்  (21.6.2021) திங்கள்கிழமை  நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது: தமிழகத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முதலமைச்சர்  மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக கோவிட் தொற்று பெருமளவு குறைந்துள்ளது.

பொதுமக்களை கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தி கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5,867 மாற்றுத்திறனாளிகளில் இதுவரை 1,025 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இப்பணியை மேலும் விரைவுப்படுத்திட கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லத்திற்கே சென்று தடுப்பூசி போடவும், தனியார் தொண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் வகையில் மறுவாழ்வு இல்லத்திற்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அருகில் உள்ள இடங்களில் முகாம் நடத்தி கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிக ளுக்கும் கோவிட் தடுப்பூசி தவறாமல் செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் நடவக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர் கவிதா ராமு.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு, பொதுசுகாதார துணை இயக்குநர்கள்  கலைவாணி, விஜயகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Top