06/Aug/2021 02:56:02
ஈரோடு, ஆக: ஈரோடு மாலட்டம், பவானி சங்கமேஸ்வரர் , பண்ணாரியம்மன் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அமலுக்கு வந்தது.
தமிழக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அரசின் செயல்பாடுகள், எழுத்து பயன்பாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் தமிழ் மொழியை பயன்படுத்த, தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இதன்படி, அரசு கட்டடங்களில் தமிழ் வாழ்க என்ற வாசகத்துடன் பெயர் பலகை, வண்ண விளக்குகள் வைத்துள்ளனர். அத்துடன் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழில் அர்ச்சனை என்பது பல கோவில்களில் நடைமுறையில் இருந்தாலும், அதை செம்மைப்படுத்தும் வகையில் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தின் கீழ், தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்கள் விவர பெயர் பலகைகளை கோவிலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.
இதன்படி, பூஜை செய்பவர்கள் தமிழில் கட்டாயம் அர்ச்சனை செய்ய வேண்டும், என படிப்படியாக கோவில்களில் அமலாகி வருகிறது. தமிழகத்தில் 47 முக்கிய கோவில்களில் இத்திட்டம் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.