logo
ஆழ்கடல் மீன்பிடிப்பு படகு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெற மீனவர்கள் அணுகலாம்: ஆட்சியர் தகவல்

ஆழ்கடல் மீன்பிடிப்பு படகு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெற மீனவர்கள் அணுகலாம்: ஆட்சியர் தகவல்

01/Aug/2021 02:50:44

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பு படகு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெற மீனவர்கள் அணுகலாம். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வெளியிட்ட தகவல்: தமிழகத்தின் அண்மைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி அழுத்தத்தை குறைத்திடவும், ஆழ்கடல் பகுதியில் செறிந்துள்ள மீன்வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்திடவும்,  தமிழக மீனவர்கள் தங்களின் பாரம்பரியமிக்க கடற்பகுதியில் மீன்பிடிக்கும் பொழுது எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு மீனவர்களின் படகுகளும் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமை ஆக்கப்படுகிறது.   

எனவே, தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதை தவிர்த்திடவும் மற்றும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெறுக்கிடும் வகையில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் கூடிய பாக் நீரிணை பகுதிகளில்,  இழுவலை படகுகளுக்கு மாற்றாக ஆழ்கடல் மீன்பிடிப்பு படகு கட்டும் திட்டத்தை கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் மூலம்   தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

பாக் நீரிணை பகுதியில் இழுவலை படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றிடும் திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்றின் விலை ரூ.80 லட்சம் ஆகும். இத்தொகையில் 50 சதவீதம் (அதாவது ரூ.40 இலட்சம்) மத்திய அரசு மானியம், 20 சதவீதம் (அதாவது ரூ.16 இலட்சம்) மாநில அரசின் மானியம், 10 சதவீதம் (அதாவது ரூ.8 இலட்சம்) பயனாளிகளின் பங்களிப்பு மற்றும் 20 சதவீதம் (அதாவது ரூ.16 இலட்சம்) வங்கி கடனாகவும் பெற்று இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தினை செயல்படுத்திட ,தகுதியின் அடிப்படையில் 20 படகு கட்டும் தளங்கள் இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்பட்டு, இதுவரை 42 ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு சிறப்பாக கடற்பயணம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும், இத்திட்டத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம் மத்திய அரசின் பங்களிப்புடன் கூடிய திட்டத்தின் (Central Sponsored Scheme)  கீழ் ரூ.128.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குந்துக்கால் மீன்பிடி இறங்குதளமானது மத்திய மாநில அரசின் பங்களிப்புடன் கூடிய திட்டத்தின் கீழ் ரூ.70 கோடி மதிப்பீட்டில் இராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கட்டப்பட்டு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூம்புகார் மீன்பிடி இறங்குதளமானது மத்திய மாநில அரசின் பங்களிப்புடன் கூடிய திட்டத்தின் கீழ் ரூ.148 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மற்றும் நாட்டு படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்கள் இந்த பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளதால், இத்திட்டத்தில் பயன்பெறும் மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களை இத்துறைமுகத்தில் விற்பனை செய்ய ஏதுவாக உள்ளது.   மேலும், இத்திட்டத்திற்காக திறன் மேம்பாட்டு பயிற்சி மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.   

  அதாவது ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் சுகாதாரமான முறையில் மீன்களை கையாளும் தொழில் நுட்பம் தொடர்பான பயிற்சியை சென்னை மற்றும் கொச்சியிலுள்ள மத்திய மீன்வள கடல் சார் பொறியியல் பயிற்சி நிலையம்(CIFNET)மூலமாக 23 குழுக்களாக 310 மீனவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு இத்திட்டம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் எண் 23, லெட்சுமிபுரம் முதல் வீதி புதுக்கோட்டை-  622 001 -எனும் முகவரியில் இயங்கும், புதுக்கோட்டை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். மேலும் விவரத்திற்கு 04322-220069 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். 

Top