16/Jul/2021 11:19:37
ஈரோடு, ஜூலை:ஈரோடு எஸ் பி அலுவலகத்திற்கு ஈரோடு வ உ சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து எஸ் பி சசிமோகனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த புகார் மனு விவரம்:
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம். இந்நிலையில் வியாபாரிகளுக்கும் குத்தகைதாரருக்கு சுங்க கட்டணம் குறித்து பிரச்னை ஏற்பட்டது.
இந்த பிரச்னையை முன்னிறுத்தி தங்களுடைய உரிமைகளை கோரிய வியாபாரிகள் மற்றும் நிர்வாகம் மீது குத்தகைதாரர் அருண் பிரசாத் மற்றும் திமுக பிரமுகரான குறிஞ்சி என் சிவகுமார் ஆகியோர் தங்கள் அரசியல் பலத்தாலும், பண பலத்தாலும் குத்தகை மற்றும் சுங்க வரி குறித்த பிரச்னையை தட்டிக் கேட்ட நிர்வாகிகள் மீது மூன்றாம் நபர் மூலமாக கொடுத்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது.
ஆனால், அதே நேரம் வியாபாரிகள் ஆகிய நாங்கள் குத்தகைக்காரர் அருண்பிரசாத், திமுக பிரமுகர் குறிஞ்சி என். சிவகுமார் மீது கொடுத்த புகாரின் பெயரில் இன்று வரையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து காரணம் கேட்டால் வியாபாரியின் மீது பொய்யான வழக்குகள் போடப்படுகிறது. சில அலுவலர்களும் இவர்களுக்கு சாதகமாகவே செயல் படுகின்றனர்.
வியாபாரிகள் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகி மோகன் மீது வீரப்பன்சத்திரம் காவல்நிலையத்தில் போடப்பட்ட வழக்கை ரத்து செய்யும் வேண்டும். வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த குத்தகைதாரர் அருண்பிரசாத், திமுக பிரமுகர் குறிஞ்சி என் சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.