logo
 பொன்னமராவதி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ரூ.2.73 கோடியில் வளர்ச்சிப்பணிகள்: ஆட்சியர் கவிதாராமு ஆய்வு

பொன்னமராவதி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ரூ.2.73 கோடியில் வளர்ச்சிப்பணிகள்: ஆட்சியர் கவிதாராமு ஆய்வு

30/Jun/2021 08:54:46

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமையின்  மூலம் ரூ.2.73 கோடியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு   (30.6.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர்  கூறியதாவதுதமிழ்நாடு முதலமைச்சர்  பொது மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கிராமப்புறங்களில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்வதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

அதனடிப்படையில், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கூடலூர் ஊராட்சி, சித்தூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி கட்டட கட்டுமான பணி, நல்லூர் ஊராட்சி, ஆத்தங்காடு பகுதியில் ரூ.2.38 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடும் பணி.

வாழைக்குறிச்சி ஊராட்சி, ஆத்தங்காடு கிராமத்தில் 6 வீடுகளில் ரூ.3.06 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிடும் பணிகள் என பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ரூ.2.73 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இதை போல்வேளாண் துறையின் சார்பில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கூடலூர் கிராமத்தில் ரூ.5 லட்சம் மானியத்தில் 3 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட பவர் டில்லர்கள் பயன்பாடுகளையும்,


வாழைக் குறிச்சியில் ரூ.36,000 மதிப்பீட்டில் மழைத்தூவான் அமைத்து நெற்பயிர் சாகுபடி செய்யும் பணி, ரூ.19,000 மதிப்பீட்டில் தெளிப்பு நீர் முறையில் விவசாயம் மேற்கொள்ளும் பணி, சாத்தனூரில் ரூ.1.09 லட்சம் மதிப்பீட்டில் சொட்டு நீர் பாசன முறையில் விவசாயம் மேற்கொள்ளும் பணியையும் என ரூ.6.64 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வேளாண் திட்டப் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட நாட்களில் செய்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், முடிவுற்ற    பணிகளை உரிய முறையில் பராமரித்திடவும் சம்பந்தப்பட்ட   அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் கவிதா ராமு.

முன்னதாக பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் கூடலூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாயவிலைக் கடைக்கு நீண்ட நாட்களாக மின் இணைப்பு வழங்காததால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளதை இந்த ஆய்வின் போது அறிந்த ஆட்சியர்  ஒருவார காலத்திற்குள் மின் இணைப்பு வழங்கிட மின்வாரியத்துக்கு உத்தரவிட்டார்கள்.

இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார்வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

Top