logo
புதுகை டவுன்ஹால் அருகேயுள்ள  பயணிகள் நிழல்குடையை மூடியுள்ள திரை விலகிடுமா?

புதுகை டவுன்ஹால் அருகேயுள்ள பயணிகள் நிழல்குடையை மூடியுள்ள திரை விலகிடுமா?

29/Jun/2021 01:21:15

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியிலுள்ள டவுன் ஹால் அருகேயுள்ள     பயணிகள் நிழல்குடையை  அங்கு காத்திருக்கும் பயணிகளின் பாதுகாப்பு கருதி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு  உடனடியாக மூடப்பட்டிருக்கும் திரையை  அகற்ற   வேண்டுமென பொதுமக்களும், பயணிகளும் வலியுறுத்துகின்றனர்.

புதுக்கோட்டை நகரின் மைப்பகுதியில் உள்ல  டவுன்ஹாலில் இலக்கிய விழாக்கள் உள்பட பல்வேறு பொது நிகழ்வுகள் மற்றும் மாபெரும் புத்தகத்திருவிழா போன்றவை நடத்தப்படுகின்றன. தற்போது  இங்கு  பொது மக்களுக்கு  கொரானா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகளில் இங்கு  ஊசிபோட வருபவர்கள்  இந்த நிழல் குடையில்தான் காத்திருந்து பேருந்துகளில் பயணம் செய்து  வருகின்றனர். கடந்த சட்டப்பேரவைத்தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இதை அமைத்த அரசியல் வாதியின் பெயரை வாக்காளர்களின் பார்வையிலிருந்து மறைப்பதற்காக திரைச்சீலை மூலம் இந்த  நிழல்குடை மூடப்பட்டது.

தேர்தல் முடிந்து 40 நாள்களை கடந்து புதிய ஆட்சி பொறுப்பேற்றபிறகு புதுக்கோட்டை நகரில் பழைய பேருந்து நிலையம், அண்ணாசிலை ஆகிய பகுதிகளில் தற்போதை ஆளும் கட்சி உறுப்பினர்களால் அமைக்கப்பட்டிருந்த மெகா நிழல் குடைகள் புதுப்பிக்கப்பட்டு  பளிச்சென்று மின்னுகின்றன.

ஆனால், டவுன் ஹால் அருகேயுள்ள நிழல்குடை அதிமுக முன்னாள் எம்பி-யின் நிதியில் அமைக்கப்பட்டதால் அவரது பெயரைத்தாங்கி நிற்கிறது. அதனால்தான் என்னவோ  இன்று வரை இந்த நிழல்குடை  போர்த்தியபடியே இருப்பதாக பயணிகளும்  இப்பகுதியை  கடந்து செல்லும் பொதுமக்கள் நினைக்கின்றனர்

எனவே, புதுக்கோட்டை  நகராட்சி நிர்வாகம் இந்த நிழல்குடையில் உள்ள திரையை நீக்கி பொதுமக்கள் அச்சமின்றி காத்திருக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Top