logo
ஈரோடு மாவட்டத்தில்  111 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்:  இரவிலேயே வரிசையில் காத்திருந்த மக்கள்

ஈரோடு மாவட்டத்தில் 111 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்: இரவிலேயே வரிசையில் காத்திருந்த மக்கள்

25/Jun/2021 04:45:48

ஈரோடு,ஜூன்: ஈரோடு மாவட்டத்தில்  111 மையங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் ஊசி போட்டுக் கொள்வதற்காக முதல்நாள்  இரவு முதலே பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடப்படும் மையங்களில் இரவிலேயே மக்கள் திரளத்  தொடங்கி விடுகின்றனர். டோக்கன் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சில இடங்களில் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்படுவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில்  வியாழக்கிழமை  முதல் தடுப்பூசி சுழற்சி முறையில் போடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் ஒவ்வொரு நாளும் 20 வார்டுகள் வீதம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி  வெள்ளிக்கிழமை  மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பி.பி. அக்ரஹாரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பி.பி. அக்ரஹாரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வீரப்பன்சத்திரம் சுப்பிரமணிய கவுண்டன் வலசு,  நெசவாளர் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி.

வீரப்பன்சத்திரம் மாநகராட்சி அலுவலகம், எஸ். எம். வி .பி. மெட்ரிக் பள்ளி, குமலன்குட்டை மாநகராட்சி பள்ளி, சம்பத் நகர் அம்மன் பள்ளி, எம்.ஜி.ஆர். வீதி அங்கன்வாடி மையம், முனிசிபல் காலனி சத்துணவு கூடம், இடையன்காட்டுவலசு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, சூரம்பட்டிவலசு அரசு மாணவியர் விடுதி, சூரம்பட்டிவலசு மலைக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்ப கவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.


தங்கச்சி சாலை ராதாகிருஷ்ணன் சாலை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, சூரம்பட்டி சிஎஸ்ஐ துவக்கப்பள்ளி, பாலசுப்ப ராயலு வீதி பள்ளி, செவன்த் டே பள்ளி, சிஎஸ்ஐ பள்ளி, கச்சேரி வீதி மாநகராட்சி பள்ளி, வளையக்கார வீதி மாநகராட்சி பள்ளி ஆகிய இருபது மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதனால் மக்கள் அதிகாலை முதலே இந்த மையங்களில் குவிய தொடங்கினர். இந்நிலையில் இடையன்காட்டுவலசு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் முதல்நாள் இரவே வந்தனர். அவர்கள் காலணிகள் கற்களை வைத்து இடம் பிடித்துக் காத்து நின்றனர். 200 பேருக்கு டோக்கன் அடிப்படையில் ஒவ்வொரு மையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டது.

இதேபோல் மொடக்குறிச்சி அம்மாபேட்டை அந்தியூர் பவானி கொடுமுடி பெருந்துறை பவானி சாகர் டி என் பாளையம் நம்பியூர் கோபி சத்தியமங்கலம் தாலுகா சென்னிமலை போன்ற பகுதியில் இன்று தடுப்பூசி போடப்பட்டது.    ஈரோடு மாவட்டம் முழுவதும் 111 மையங்களில்  தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

Top