logo
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே போலீஸார் தாக்கியதில்  காயமடைந்த விவசாயி பலி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே போலீஸார் தாக்கியதில் காயமடைந்த விவசாயி பலி

23/Jun/2021 03:54:11

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, குடிபோதையில் இருந்த விவசாயியை போலீஸார் தாக்கியதில் விவசாயி  பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகேசன்(40). இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும், ஜெயப்பிரியா, ஜெயப்பிருந்தா ஆகிய இரு மகள்களும், கவிப்பிரியன் என்ற மகனும் உள்ளனர். விவசாயியான இவர், இடையபட்டி- வாழப்பாடி சாலையில், மளிகை மற்றும் பழக்கடைகள் நடத்தி வந்தார்.

மது அருந்தும் பழக்கம் உள்ள  இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வெள்ளிமலைப் பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்து இருப்பதாக தகவல் அறிந்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் , வெள்ளிமலை பகுதிக்குச் சென்று, மது அருந்தி விட்டு மீண்டும் இதே வழித்தடத்தில் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை மாலை, கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச் சாவடி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், முருகேசன் மற்றும் இவரது நண்பர்களை நிறுத்தி விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த போலீஸார், முருகேசனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தவறி விழுந்த முருகேசனின் தலையில் அடிபட்டு சுயநினைவ இழந்தார். 108 அவசர ஊர்தி மூலம்  தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் நிலை மோசமடைந்ததால்புதன்கிழமை அதிகாலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றபோது‌  உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள், முருகேசனை தாக்கிய போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புதன்கிழமை காலை ஏத்தாப்பூர் காவல் நிலையத்தை  முற்றுகையிட்டு புகார் கொடுத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. விவசாயியை கடுமையாகத் தாக்கி இறப்புக்கு காரணமான போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவசாயக் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்கும் வரை, சேலம்  அரசு மருத்துவமனையில் உள்ள முருகேசனின் சடலததை வாங்கப் போவதில்லை என்று முருகேசனின் உறவினர்கள்  தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாகன சோதனையின்போது காவலர் தாக்கி விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் சரக டிஐஜி நேரில் ஆய்வு செய்த பின்பு பெரியசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

சாமானியர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்:கனிமொழி எம்பி கருத்து

சேலம் மாவட்டம்  வாழப்பாடி அருகே காவல் துறையினரின் தாக்குதலால் படுகாயமடைந்த விவசாயி உயிரிழந்தது தொடர்பாக எம்பி கனிமொழி சுட்டுரையில்  பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது. சாமானிய மக்கள் மீது காவல் துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7-ஆம் தேதிக்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும் என்றும், நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.



Top