logo
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் காய்ச்சல் கண்டறியும் முகாமினை அமைச்சர் மெய்யநாதன் நேரில்  ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் காய்ச்சல் கண்டறியும் முகாமினை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு

10/Jun/2021 06:06:23

புதுக்கோட்டை, ஜூன்  புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சி, கேவிஎஸ் தெருவில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் முகாமினை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (10.06.2021) வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர்  மெய்யநாதன் கூறியதாவது:தமிழகத்தில் கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் கோவிட் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்போது ஆலங்குடி கேவிஎஸ் தெருவில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம்   ஆய்வு செய்யப்பட்டது.

ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 4,318 குடியிருப்புகளில் 13,712 பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 15 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

ஒருவருக்கு பயன்படுத்திய பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவியை மற்றவருக்கு பயன்படுத்தும் போது கண்டிப்பாக கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்த பிறகே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் கண்டறியும் முகாம்களில் கோவிட் தொற்று கண்டறியப்பட்டவர்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

மேலும் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட தெர்மல் ஸ்கேன் கருவி, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகளின் மூலம் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகழுவுதல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை தவறாது கடைபிடித்து கோவிட் நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்.

இந்த ஆய்வின் போது ஒன்றியக்குழு தலைவர்வள்ளியம்மை தங்கமணி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top