logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,89,907 பேருக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,89,907 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

22/Jun/2021 07:25:27

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 1,89,907 ஆக அதிகரித்துள்ளது.

 

கொரோனாவை தடுக்க தடுப்பூசியே பேராயுதம்

 

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் வீரியம் எடுத்தது. இதனை தடுக்க தடுப்பூசியே மிகப்பெரிய பேராயுதம் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து நகரம் முதல் கிராமங்கள் வரை தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டது. இதை பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் அதிகளவில் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில்,தமிழகத்தில் 35 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றின் பாதிப்பு தற்போது 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

 

100- க்கும் கீழ் குறைந்த பாதிப்பு

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடக்கத்தில் 450- க்கும் குறையாமல் இருந்தது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் தற்போது கொரோனா பாதிப்பு 100 - க்கும் கீழ் குறைந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 20 ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்து 810 அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 284 பேர் உயிரிழந்துள்ளனர். 926 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

 

புதுக்கோட்டை நகராட்சி  நகர்மன்ற கட்டிடம், தர்மராஜா பள்ளி, நாடார் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதேபோல் அண்டக்குளம் வட்டாரம், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 1,89,907 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை வரை முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 1,61, 718 ஆகவும், இரண்டாவது டோஸ் 28,189 பேரும் செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top