20/Jun/2021 07:28:06
புதுக்கோட்டை, ஜூன்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நூலகப் புத்தகங்கள் வாங்கியதில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜாவிடம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தக்கூட்டணி சார்பில் ஆதரவற்றோருக்கு நிவாரணப்பொருள்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜாவிடம் நிர்வாகிகள் விடுத்துள்ள கோரிக்கை விவரம்:
ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படாத நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நூலகப் புத்தகங்கள் கடந்த காலத்தில் தரமற்றதாக வழங்கப்பட்டது. எவ்வித எழுத்துப்பூர்வமான ஆணையும் இன்றி ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் பெயரில் காசோலை வழங்க வற்புறுத்தப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், 2021-22 -ஆம் கல்வியாண்டில் ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று மாணவர் சேர்க்கை விலையில்லாப் பொருட்கள் வழங்குதல்
போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆகவே கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதாலும் மூன்றாம் அலையை எதிர்கொள்ள வேண்டி உள்ளதாலும் ஆசிரியர்களையும் முன்களப் பணியாளர்களாகக் கருதி தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.