logo
உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி பாகுபாடின்றி  மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: அமைச்சர் எஸ். ரகுபதி

உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி பாகுபாடின்றி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: அமைச்சர் எஸ். ரகுபதி

18/Jun/2021 07:31:29

புதுக்கோட்டை, ஜூன் உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி பாகுபாடின்றி  மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (18.06.2021)  நடைபெற்ற  ஊராட்சிமன்றத் தலை வர்கள் கூட்டமைப்பின் சார்பாக ரூ.2 லட்சத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.ரகுபதி  மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் கோவிட் நோய் தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோவிட் காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை  முதல்வர் வழங்கி வருகிறார். மேலும் பல்வேறு தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கோவிட் நிவாரணப் பணிக்கு தாமாக முன்வந்து நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

அதனடிப்படையில், திருமயம் ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர் சார்பில்  முதலமைச்சர்  கோவிட் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை வழங்கியுள்ளனர். அதற்கு நன்றியையும்  வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் கோரிக்கையினை ஏற்று பழமையான திருமயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் முதல் 5 ஆண்டு காலத்திற்குள் புதிதாக கட்டி திறக்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமயத்தில் சித்த மருத்துவப் பிரிவு அமைக்கப்பட்டு மேம்படுத்தபட உள்ளதுடன் அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனை அமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் எவ்வித கட்சி பாகுபாடுமின்றி தங்களது ஊராட்சிகளைச் சார்ந்த  பொது மக்களின் சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி உள்பட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு தேவையான அனைத்து  உதவிகளையும்  இந்த அரசு செய்யத்  தயாராக உள்ளது.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வழங்கிய மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் மூலம் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழமொழிக்கேற்ப ஒவ்வொருவரும் வழங்கிய சிறு தொகைகள் பெரிய தொகையாக மாறியுள்ளது.

இதுபோன்ற நிவாரண உதவித் தொகைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன்பெறும். இதுபோன்று அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.

இந்நிகழ்வில் திருமயம் ஒன்றியக்குழுத் தலைவர் அழ. ராமு, திருமயம் ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் மேகநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு () சிதம்பரம், கூட்டமைப்பின்  நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Top