logo
கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகள்:ஈரோட்டில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்  ஆய்வு

கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகள்:ஈரோட்டில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு

10/Jun/2021 06:28:05

ஈரோடு, ஜூன்: ஈரோட்டில் வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்புப்பணிகள் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்  வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப்பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்  கூறியதாவது: நல்ல திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு ஆட்சி பொறுப்பை ஏற்ற நிலையில் கொரோனா தாக்கம் அதிகமானதால், அப்பணிகளை விரைவுபடுத்துவதுடன், கொரோனா தடுப்புப் பணிகளையும்  மேற்கொண்டுவருகிறது.

நகரங்களைவிட கிராமங்களில் கொரோனா அதிகமாக பரவுவதால், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மூன்று நாளாக சிறப்பு கவனம் செலுத்துகிறோம். நோய் பாதித்தோரை வகைப்படுத்தி, முறைப்படுத்தி சிகிச்சை வழங்குவதால், நோய் விரைவாக குணமாகிறார்கள்.

இம்மாவட்டத்தில் 100 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமித்து ஒவ்வொரு வீட்டிலும் நோய் தொற்று, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி, அவர்கள் வெளியூர் சென்றுள்ளார்களா, வெளியூரில் இருந்து யாரும் வந்துள்ளார்களா என்ற விவரங்களை தினமும் சேகரிக்கின்றனர். இதன் மூலம் நோய் விரைவாக கட்டுக்குள் வந்துள்ளது.

தொற்று அதிகமானால், அங்கு முகாம் அமைத்து காய்ச்சல் பரிசோதனையுடன், மருத்துவர்கள் தேடி சென்று மருந்து வழங்குகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225  ஊராட்சிகளும் அருகிலுள்ள  நகரங்களுடன் தொடர்பில் இருப்பதால், தொற்று ஏற்படுகிறது.

தொடர் நடவடிக்கையால், மூன்று  ஊராட்சிகளில் ஒருவருக்கு கூட நோய் தொற்று இல்லை.இம்மூன்று பஞ்சாயத்துக்கும் பஸ் போக்குவரத்து, பிற வாகன பயணங்களுக்கு வழி இல்லை, என தெரியவந்தது. எனவே, போக்குவரத்து வசதி, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில்தான் நோய் அதிகம் உள்ளதை அறிய முடிகிறது என்றார் அமைச்சர் பெரியகருப்பன். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Top