logo

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால் ஈரோட்டில் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு

09/Jun/2021 07:35:50

ஈரோடு, ஜூன்: ஈரோட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால் வாகன போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கொரோனா தொற்று   பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வு உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பிசசிமோகன் தெரிவித்திருந்தார்.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச் சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

16 -ஆம் நாளான புதன்கிழமை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முக கவசம் அணியாமல் வந்த 220 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 295 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 245 இரு சக்கர வாகனங்களும், 17  நான்கு  சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒருநாளில் மட்டும் ரூ.2.5 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் வரும் 14-ஆம் தேதி வரை தளர்வு உடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் இன்று வழக்கத்தை விட வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் -பதிவு இருந்தால் மட்டுமே வாகனங்கள் மாவட்டத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். மேலும் முன்புபோல் போலீசார் அதிக கெடுபிடி கொடுக்காததால் வாகன  நடமாட்டம் அதிகரித்துள்ளது.

Top