logo
புதுக்கோட்டை மாவட்டம், கரு.வடதெரு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: அமைச்சர் ரகுபதி திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கரு.வடதெரு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: அமைச்சர் ரகுபதி திறப்பு

01/Jun/2021 01:20:38

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், கரு.வடதெரு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை   திங்கள்கிழமை  (31.5.2021)  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி திறந்து வைத்தார்.

பி்ன்னர் அமைச்சர் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக நெல் விளைச்சல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில்  தற்போது  கரு.வடதெரு கிராமத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக விவசாயிகள் இடைதரகர்கள் இன்றி தாங்கள் விளைவித்த நெல்லை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 50,000 ஆயிரம்  மெ.டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டு, அதற்கு தேவையான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குறுவை சாகுபடி அறுவடைக்காக தற்பொழுது மாவட்டத்தில் 22 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. மேலும் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தேவையான இடங்களில் ஆய்வு செய்து, புதிய  நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

எனவே விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

முன்னதாக மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் அவர்கள் கறம்பக்குடி வட்டம், வானக்கன்காடு மற்றும் கோட்டைக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் கோவிட் தொற்று காலத்திலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை  அணிவித்து  வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் மோகன், ஒன்றியக் குழுத் தலைவர் மாலா ராஜேந்திரதுரை, ஊராட்சிமன்றத் தலைவர் பாஞ்சாலன், மூத்த வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Top