logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள்: அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள்: அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை

13/May/2021 04:03:10

புதுக்கோட்டை, மே:  புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதிசுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் அரசு அலுவலர்களுட னான ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில்  சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி பேசியதாவது:

தேர்தலில் வெற்றி பெற்றவுடனே ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் வரை காத்திருக்காமல்  முதல்வர் மு..ஸ்டாலின் உடனடியாக அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு கோவிட் நோய்த்தொற்றை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்தமிழகத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதுடன்  கோவிட் நோய்த்தொற்று தடுப்பு பணிகளும் முதன்மையாக உள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தடுப்பில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக முக்கியமாகும். முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும். கொரோனா குறித்து பொதுமக்கள் கவனக்குறைவாக இருப்பதால் இதுகுறித்து ஊராட்சி அளவில் பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வை அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும்.

நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான ஆக்ஸிஜன்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

மேலும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய அரசு தயார் நிலையில் உள்ளது. கோவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகபடுத்தவும், கொரோனா தொற்று உள்ள இடங்களில் அதிக பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் கொரோனா பரவலை தடுக்கலாம்.

பொதுமக்கள் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து மருத்தவமனைக்கு சிகிச்சைக்கு வருவதன் மூலம் உயரிழப்புகளை தவிர்க்கலாம். கொரோனா  தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அரசு மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் ரகுபதி.

இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல், விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ,வீ.மெய்யநாதன் பேசியதாவது:

கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை  முதல்வர் மேற்கொண்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக கோவிட் தடுப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டபோது பொய்யுரையும், புகழுரைகளை தவிர்த்து உண்மை நிலவரத்தை தெரிவிக்கும்படி அறிவுறுத்தினார். அதனையே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்களிடம் நாங்கள் வலியுறுத்துகிறோம். நேற்றைய தினம்  மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகைகளை முதல்வர் அறிவித்துள்ளார்.

மருத்துவத்துறையில் உள்ள அனைவருக்கும் தற்பொழுது நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மனதைரியத்தை  ஏற்படுத்த வேண்டும். முதல்வர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் செவிலியர்களை சந்தித்தபொழுது கடந்த 3 மாதங்களாக கோவிட் சிகிச்சை பணியினால் வீட்டிற்கு செல்லவில்லை எனவும் தங்களது குழந்தைகளை வீடியோ கால் மூலமாகவே  பார்த்து வருவதாக தெரிவித்தனர். அந்த அளவிற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த காலங்களில் கொரோனா தொற்றிலிருந்து மீள்வதற்கு உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை போன்ற துறைகள் இணைந்து பணிகளை மேற்கொண்டது. அதேபோன்று தற்பொழுதும் இத்துறைகள் செயல்பட வேண்டும். உள்ளாட்சித்துறை அலுவலா;கள் கொரோனா தடுப்பு பணிகளை சம்பந்தப்பட்ட பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

தற்பொழுது கொரோனா நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவாசிய பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல்.பாலாஜி சரவணன்மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, பொது துணை சுகாதார இயக்குநர்கள் கலைவாணி, விஜயகுமார், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top