logo
 லேசான அறிகுறி இருக்கும்போதே பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றால் உயிரிழப்பை தடுக்கலாம்: சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி  பேட்டி

லேசான அறிகுறி இருக்கும்போதே பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றால் உயிரிழப்பை தடுக்கலாம்: சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி பேட்டி

12/May/2021 09:23:47

 

புதுக்கோட்டை, மே:  லேசான அறிகுறி இருக்கும்போதே பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றால் உயிரிழப்பை தடுக்கலாம் என்றார் தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சா  எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தமிழக முதல்வரின் ஆணைப்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இன்றையதினம் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 667 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு நாளை வரை தேவையானஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது

மருத்துவமனைகளில் நோயின் தீவிரம் அதிகமுள்ள நோயாளிகளுக்கு உடனடியாகத் தேவைப்படும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களும் பணியில் சேர அழைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கொரோனா தொற்றிலிருந்து உயிரிழப்பைத்தடுக்க  நோயின் ஆரம்ப நிலையிலேயே அதாவது 3 அல்லது 4 நாள்களுக்குள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டு உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதைச்செய்யாமல்  முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

 பிளஸ்2 தேர்வு, 10 ஆம்  வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி, நீட் தேர்வு போன்ற விஷயங்களின்  கல்வி்த்துறையினர், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைவருடன் ஆலோசனை செய்து   நல்ல முடிவை முதல்வர் அறிவிப்பார். 7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநரிடமிருந்து குடியரசுத்தலைவருக்கு  சென்றுள்ளது. இப்பிரச்னையில் அனைத்துத்தரப்பினரின் விருப்பத்தையும் நிறைவேற்றும் வகையில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

முல்லைபெரியாறு, மேக்கேதாட்டு அணை, நீட் உள்பட தமிழகத்தின் பல்வேறு உரிமைகளுக்காக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தொடரப்பட்டுள்ள வழக்குகளை சட்ட வல்லுனர்கள் மூலம் உரிய முறையில் நடத்தி வெற்றி காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி

இதில், மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரிஅரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், கட்சி நிர்வாகிகள் . நைனாமுகமது, . சந்திரசேகரன், சுப. சரவணன், எம்.எம். பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Top