logo
கொரோனா பரவல் எதிரொலி: பேருந்துகளில்  குறைந்து போன பயணிகள் கூட்டம்: இருசக்கர வாகனங்களில் செல்ல ஆர்வம்

கொரோனா பரவல் எதிரொலி: பேருந்துகளில் குறைந்து போன பயணிகள் கூட்டம்: இருசக்கர வாகனங்களில் செல்ல ஆர்வம்

23/Apr/2021 06:31:17

ஈரோடு, ஏப்:கொரோனா பரவல் எதிரொலியாக பேருந்துகளில் பயணிகள் கூட்டம்  குறைந்து போனது. ஆனால் இருசக்கர வாகனங்களில் செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 தமிழகம் முழுவதும் கொரோனா 2-ஆவது அலை தீவிரமாக உள்ளது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழுநேர ஊரடங்கும் அறிவித்துள்ளது.ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 11 பணிமனைகளில் தினமும் 728 உள்ளூர் வெளியூர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

 இதில் பகலில் மட்டும் 80 சதவீதமும் இரவில் 20 சதமும்  பேருந்துகள்  இயக்கப்பட்டு வந்தனகொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தால் இரவு நேர  பேருந்து  சேவை ரத்து செய்யப்பட்டு பகல் நேரத்தில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

 கொரோனா எதிரொலி காரணமாக ஈரோட்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பயணிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.குறிப்பாக கோவை சேலம் திருப்பூர் நாமக்கல் போன்ற வெளி மாவட்ட பேருந்துகளில்  பயணிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிட்டது. கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் பேருந்து  பயணத்தை தவிர்த்து இருசக்கர வாகனங்களில் செல்ல தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இதேபோல் தொலைதூர  பேருந்துகளிலும்  பயணிகள் எண்ணிக்கையும் குறைந்து போனதால் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

நகர பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது.இரவு 7 மணிக்கு மேல் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின்  இயக்கம்  மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, தஞ்சை ,நாகை, கிருஷ்ணகிரி, ஓசூர், திருநெல்வேலி என தொலைதூரம் இயக்கும்  பேருந்துகள்  தினசரி ஒருமுறை சென்று வரும் வகையில் இயக்கி வருகிறோம்.


கரூர் நாமக்கல் ,சத்தியமங்கலம், பொள்ளாச்சி போன்ற ஊர்களுக்கு இயக்கும் பஸ்கள் கடைசிநேர இயக்கத்தை நிறுத்தி உள்ளோம். இதில் தொலைதூரத்திலிருந்து வரும் பஸ்கள் மாலை 7 மணிக்கு முன் ஈரோடு பேருந்து நிலையம் வந்து விட்டால் அவற்றை கோபி, சத்தியமங்கலம், பவானி ,கொடுமுடி போன்ற தேவையானவர்களுக்கு இயக்கி வருகிறோம்.வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின்  எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. வெளி மாவட்டங்களுக்கு 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால்  வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

Top