logo
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்- ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்- ஆர்ப்பாட்டம்

08/Dec/2020 04:43:46

ஈரோடு- டிச: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி  தலைநகர் தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு  அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மூன்று வேளாண்  சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம்  நடைபெற்றது. 

ஈரோடு மாவட்டத்திலும் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஈரோடு மாநகர் பகுதிக்குள்பட்ட சூரம்பட்டி நால்ரோட்டில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் மறியல் போராட்டம் நடந்தது.

 சிஐடியு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் 37 பேர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் அனைவரையும்  போலீசார் கைது செய்தனர். இதைப்போல் மூலப்பட்டறை பகுதியிலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் 70 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அனைவரும்  கைது செய்யப்பட்டனர். வீரப்பன் சத்திரத்தில் மறியலில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

 ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே தமிழர் கழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் விவசாயிகள் போன்று வேடமிட்டு மண்வெட்டி நெல் நாற்றுடன் வந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதேபோல் காவேரி ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 62 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் சோலார் பகுதியிலும், மொடக்குறிச்சி, பவானி  உள்பட  மாவட்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுதும்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Top