logo
பொதுமக்களின் தகுதியுடைய மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்படும்: ஆட்சியர் தகவல்

பொதுமக்களின் தகுதியுடைய மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்படும்: ஆட்சியர் தகவல்

08/Feb/2021 10:28:39

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டத்தில்  தகுதியுடைய பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற  மக்கள் குறை கேட்பு நாள் முகாமுக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை நடத்த தொடர்புடைய அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தபின் ஆட்சியர் தெரிவித்தாவது:

தமிழக அரசின் உத்தரவுப்படி  கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு பின் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் மக்கள் குறைகேட்பு முகாம்  நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து விலையில்லா வீட்டுமனைப் பட்டா,  பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர்வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி 318 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை தொடர்புடைய அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு  வழங்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்தந்த கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில்  மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தகுதியுடைய பொதுமக்களின் மனுக்களின் மீது உடனுக்குடன் தீர்வு காண அலுவலர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு  நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.20,400 மதிப்பீட்டில் விலையில்லா மின் திருவைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர். 

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) கிருஷ்ணன் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்


Top