logo
வேலையில்லாத காலகட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு  ரூ.7,500 நிவாரணத் தொகை வழங்கக் கோரிக்கை

வேலையில்லாத காலகட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.7,500 நிவாரணத் தொகை வழங்கக் கோரிக்கை

18/Apr/2021 06:24:54

புதுக்கோட்டை, ஏப்:  கொரோன நோய் பரவல் காரணமாக வேலை இழந்து தவிக்கும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வழங்க வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.


 கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்:

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தவுடன் நூறுநாள்  வேலை உறுதித் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், கொரோனா நோய்த்தொற்று காரணமாக வெளியூரில் பணியாற்றிய தொழிலாளர்கள் சொந்தக் கிராமங்களுக்கு திரும்பி வருகின்றனர். அனைவரும் வேலையின்றி பட்டினியால் அவதிப்படும் சூழல் உருவாகி உள்ளது.

 எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். சட்டப்பூர்வ கூலியான ரூ.273-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும். மேலும், 100 நாள்  வேலையை 200 நாளாகவும் தினக்கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்.


  நோய் பரவல் தீவிரம் காரணமாக வேலையும் வருவாயும் இழந்து தவிக்கும் மக்களின் குடும்பத்திற்கு மாதம் ரூ.7500 நிவாரணமும், ரேசன் வினியோகம் மூலம் அரிசி பருப்பு சமையல் எண்ணெய் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்  பண்டங்களை கரோனா காலம் முழுமைக்கும் இலவசமாக வழங்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும். 


கோடை வெயில் கடுமையாக பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக நீண்ட தூரம் மக்கள் அலைய வேண்டியுள்ளதால் போர்க்கால நடவடிக்கை எடுத்து  குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். டிஏபி காம்ப்ளக்ஸ் பொட்டாஷ், கலப்பு உரம் உள்ளிட்ட உரங்களின் விலையை 60 சதவிகித்திற்கு  மேல் மத்திய பாஜக அரசு உயர்த்தி இருப்பது,  விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றிவிட்டு விவசாய உற்பத்தி முறையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையாகும். இதை எதிர்த்து தொடர்ந்து போராடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர், மாநில செயலாளர்கள் எம்.சின்னதுரை, ஏ.பழனிசாமி, துணைத் தலைவர்கள் கே.பக்ரிசாமி, பி.வசந்தாமணி உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள்  உரையாற்றினர். இதையொட்டி, சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய ஆர்.சந்திரமோகனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


Top