logo
புதுக்கோட்டையில்  பேரணியுடன் பிரசாரத்தை நிறைவு செய்த அதிமுக வேட்பாளர்

புதுக்கோட்டையில் பேரணியுடன் பிரசாரத்தை நிறைவு செய்த அதிமுக வேட்பாளர்

04/Apr/2021 08:34:46


புதுக்கோட்டை, ஏப்ரல்: புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.ஆர். கார்த்திக்தொண்டைமான்  தேர்தல் பணிக்குழுவினருடன் இருசக்கர வாகனப் பேரணியாகச்சென்று வாக்கு சேகரித்து  தனது தேர்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை  புதுக்கோட்டை நகராட்சிப்பகுதியில் நிறைவு செய்தார். 


ஏப்ரல் 6-இல் நடைபெறும் சட்டப்பேரவைத்தேர்தலில் அதிமுக சார்பில் வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான் வேட்பாளராக களத்தில் உள்ளார். இதைத் தொடர்ந்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும்  போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் விராலிமலை சி. விஜயபாஸ்கர், ஆலங்குடி தர்மதங்கவேல்,  கந்தர்வகோட்டை  ஜெயபாரதி, அறந்தாங்கி மு. ராஜநாயகம், திருமயம் பி.கே. வைரமுத்து ஆகியோரை அறிமுகம் செய்து வாக்கு சேகரித்தார். இதையடுத்துபுதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், நடிகை விந்தியா, நடிகர்  சிங்கமுத்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   உள்ளிட்டோர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர். கடந்த 20 நாள்களுக்கு மேல் நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை  மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது.


 புதுக்கோட்டை வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், கடைவீதி பகுதிகளில்  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசுகையில்,   


அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை மக்கள் உணர்ந்துள்ளனர்.ஜெயலலிதாவின் புகழ் கோட்டையாகத்திகழும் புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறச்செய்து, அந்த வெற்றியை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு  சமர்ப்பிக்க  வேண்டும். அவர் வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி   புதுக்கோட்டை மாவட்டத்திற்கென பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை வாரி வழங்கியுள்ளார். மாவட்டத்திற்கென அரசு மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, வேளாண்  பட்டயக் கல்லூரி, தொழில் பயிற்சி பள்ளி, சுற்றுலாத் தலங்களின் மேம்பாடு, சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் போன்ற எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளார்.  

மேலும்,  தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும்,  மீண்டும்  அதிமுக  ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.  நகரின் 42 வார்டு பகுதிகளிலும் நடைபெற்ற பேரணியில்  நிர்வாகிகள் ஆர். ராஜசேகரன், க. பாஸ்கர், எஸ்.ஏ.எஸ். சேட், கே. ராமதாஸ்,  செல்லம், ப. கண்ணன், தியாகு, அருண், ஜீவாசெல்வராஜ் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

 


Top