logo
எங்களுக்கு மய்யம் தமிழகம்தான் தில்லி அல்ல என்றார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்

எங்களுக்கு மய்யம் தமிழகம்தான் தில்லி அல்ல என்றார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்

24/Mar/2021 03:30:34

புதுக்கோட்டை, மார்ச்: எங்களுக்கு மய்யம் தமிழகம் தான் டெல்லி அல்ல.என்னைப் பொறுத்தவரையில் இதியாவிய தலைவாசல் தமிழகம்தான் இதை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன், மக்களை வறுமைக் கோட்டில் இருந்து செழுமை கோட்டிற்கு மாற்ற வேண்டும் என்பதே எங்கள் லட்சியம் என்றார் கமல்ஹாசன்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நீதிமய்யம் சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் எஸ். மூர்த்தி, விராலிமலை தொகுதியில் சரவணன், திருமயம் தொகுதியில் திருமேனி,ஆலங்குடி தொகுதியில் வைரவன், கந்தர்வகோட்டை தொகுதியில் கூட்டணி கட்சியான தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சி வேட்பாளர் ஆதிதிராவிடர், அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் ஷேக்முகமது ஆகியோரை ஆதரித்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் செவ்வாய்க்கிழமை  இரவு நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்ற கமல்ஹாசன் அதில் மேலும் பேசியதாவது: 


  நம்முடைய 50 ஆண்டு  கால வரலாற்றில் யாரும் பெரிதாக எதையும் செய்யவில்லை, செய்துவிடவில்லை என்பதே நமது குற்றச்சாட்டு. சேவை என்பது தானமல்ல. அது மக்களுக்கான உரிமை. காயத்துக்கு கட்டு மட்டுமே போடுகிறார்களே தவிர உடல் ஆரோக்கியத்துக்கான  மருந்தை அவர்கள் இதுவரை வழங்கவில்லை.

நான் ஹெலிகாப்டரில் வருவதை விமர்சனம் செய்பவர்கள், கஜா புயலின்போது இவர்கள் எப்படி வந்தார்கள். அப்படி  ஹெலிகாப்டரில் வந்தது  அவர்களின் பணம் அல்ல. ஆனால், இப்போது நான் ஹெலிகாப்டரில் வந்தது எனது பணம். கஜா புயலின்போது அன்று வான்வழியில் வந்தார்கள். நாங்கள்  தரையில் இறங்கி வேலை செய்தோம். ஹெலிகாப்டருக்கு நான் என்னுடைய பணத்தில் வரி செலுத்தியே வருகிறேன். இதை அவர்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.


தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டிருந்தால் தமிழ் வளராது.. தமிழை முறையாக உச்சரித்து பேசத் தெரிந்திருக்க வேண்டும். தமிழர்கள் உள்ளவரை தமிழ் நிலைத்திருக்கும். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் 100 கிமீட்டருக்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புத்தரப்படும்.  கேள்விகளுக்கு நான்  பயந்த ஆளில்லை. அரசியலை நான் மட்டும் செய்ய முடியாது. மக்களும் சேர்ந்து செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழகத்தை  வளம் பெறச்செய்ய முடியும்.


தனிமனித வருமானத்தை உயர்த்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் லட்சியம்.70 ஆண்டுகளாக  வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை மேலே கொண்டு வருவோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் இன்னும் வறுமைக்கோட்டுக்குக்கீழேதான் இருக்கின்றனர்.  அதனால்தான் கஜாபுயல், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் சிரமப்பட்டனர் அவர்களை செழுமைக்கோட்டுக்கு கொண்டு செல்வதே எனது இலக்கு என்றார் கமல்ஹாசன்


 

Top