logo
கிராமப்பகுதிகளில் ஈரோடு மேற்கு தொகுதியின் திமுக வேட்பாளர் முத்துசாமி வாக்கு  சேகரிப்பு

கிராமப்பகுதிகளில் ஈரோடு மேற்கு தொகுதியின் திமுக வேட்பாளர் முத்துசாமி வாக்கு சேகரிப்பு

19/Mar/2021 09:25:20

ஈரோடு, மார்ச்: ஈரோடு மேற்கு தொகுதி திமுக  வேட்பாளர்  சு.முத்துசாமி, கதிரம்பட்டி, நஞ்சனாபுரம், பவளத்தாம்பாளையம், சின்னமேடு, வேப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதியிலும், நசியனுார் பேரூராட்சி பகுதியிலும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார்.

கதிரம்பட்டி பகுதி வாக்காளர்களிடம் திமுக வேட்பாளர் முத்துசாமி பேசியதாவது: கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், குறிப்பாக பெண்களின் மேம்பாட்டுக்காக திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு மாதம் தோறும், 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும், என தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதுபோல, விவசாயிகள் நலனை காக்கும் வகையில் பல திட்டங்களை தெரிவித்துள்ளோம். தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் எனில், தமிழகத்தில் திமுக, தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். அதுபோல, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், புகார் மனுக்கள் அனைத்தின் மீதும், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த 100 நாளில் தீர்வு காணப்படும்.

தவிர, கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவை மேம்பட அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய திட்டங்கள் வகுக்கப்படும்.

தொழிலும், தொழிலாளர்களும் பாதிக்காமல், சுற்றுச்சூழல் காக்கும் திட்டம் அமையும். நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் அனைத்து வசதிகளும் மேம்படுத்த திமுக நடவடிக்கை எடுக்கும். எனவே, வாக்காளர்கள் உதய சூரியன் சின்னத்தில்  வாக்களித்து  வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார் அவர்.

Top